சட்டத்தில் எந்தத் தடையும் இல்லாதபோது, ஐபில் போட்டிகளை நடத்துவதை நீதிமன்றம் எப்படித் தடுக்க முடியும் என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
சென்னை திருவல்லிக்கேணி தொகுதி வாக்காளர் பிரபாகரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல வழக்கில், தேர்தல் சமயத்தில் சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடத்த தடை விதிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டும் என தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் முன்பு முறையிட்டார். ஆனால் இந்த முறையீட்டை நீதிபதிகள் ஏற்க மறுத்துவிட்டனர். வழக்குக்கு எண் வழங்கப்பட்டு, விசாரணைக்கு பட்டியலிடப்பட்ட பின்னரே, அது வழக்கமான நடைமுறையின்படி எடுத்துக்கொள்ளப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
சட்டத்தில் எந்தத் தடையும் இல்லாதபோது, போட்டிகளை நடத்துவதை நீதிமன்றம் எப்படித் தடுக்க முடியும் என்று கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி,நீங்கள் போட்டியைப் பார்க்க விரும்பவில்லை என்றால், வீட்டிலேயே இருங்கள்,போட்டிகள் நடத்தப்பட்டால் உங்களுக்கு என்ன பிரச்சினை எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
