சேலத்தில் டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி வழக்கறிஞர் ஜெகதீஷ்வரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி முக்கியமான கருத்துக்களைத் தெரிவித்து அதிரடி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார்.

நீதி பரிபாலனத்தில் முக்கிய பங்கு வகிக்கும் வழக்கறிஞர்களே குற்ற வழக்குகளை எதிர்கொண்டால், நீதிமன்றத்தை நாடி வரும் கட்சிக்காரர்களை அவர்களால் சட்டப்படி பாதுகாக்க முடியுமா என்ற கேள்வி எழுவதாக நீதிபதி தன் வேதனையைப் பதிவு செய்தார். மேலும், ஏராளமான வழக்கறிஞர்கள் இதுபோன்று குற்ற வழக்குகளில் சிக்குவது வழக்கறிஞர் சமூகத்தின் நன்மதிப்புக்குக் குந்தகம் விளைவிப்பதோடு, நீதித்துறையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையையும் கேள்விக்குள்ளாக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.

எனவே, குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட நபர்கள் புதியதாக வழக்கறிஞர் தொழிலுக்குள் நுழைவதையும், பார் கவுன்சில் சங்கங்களின் நிர்வாகிகளாகப் பதவியேற்பதையும் தடுக்கும் வகையில் கடுமையான விதிமுறைகளைக் கொண்டுவர வேண்டும் என்று இந்திய பார் கவுன்சில் மற்றும் தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் எத்தனை வழக்கறிஞர்கள் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறித்துக் கண்டறிய ஒரு சிறப்புக் குழுவை அமைக்க வேண்டும் என பார் கவுன்சிலுக்கு உத்தரவிட்டுள்ளார். அந்த வழக்குகள் வழக்கறிஞராவதற்கு முன்பு பதிவு செய்யப்பட்டவையா, வழக்கறிஞரான பிறகு பதிவு செய்யப்பட்டவையா அல்லது தொழிலில் இருக்கும்போது பதிவானவையா என்பது குறித்து முழுமையாக ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை வரும் ஆகஸ்ட் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version