ஹைதராபாத் பீர்சாடிகுடா பகுதியில் அதிர்ச்சியூட்டும் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. 25 வயதான முன்னாள் மென்பொருள் பொறியாளர் தேஜஸ்வினி என்பவர், நள்ளிரவில் உடலில் எந்த ஆடையும் இன்றி ஓடிச் சென்று, அருகிலுள்ள பீரப்பா கோயிலில் இருந்த அம்மன் சிலையை எடுத்துக்கொண்டு, பின்னர் அருகே உள்ள பீர்சாடிகுடா ஏரியில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விசாகப்பட்டினம் மாவட்டம் விசியநகரத்தைப் பூர்வீகமாகக் கொண்ட தேஜஸ்வினி, பெங்களூரில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றி வந்தார். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு தனது பணியை ராஜினாமா செய்த அவர், தாயார் அருணாவுடன் ஹைதராபாத்தின் பீர்சாடிகுடா சங்கர் நகர் பகுதியில் வாடகை வீட்டில் தங்கியிருந்தார். பெற்றோருக்கு இடையேயான திருமண முரண்பாடுகள் காரணமாகத் தந்தை விசாகப்பட்டினத்தில் தனியாக வசித்து வருகிறார்.

கடந்த ஜூலை 17ஆம் தேதி, இருவரும் நகரின் மியாபூர் பகுதியில் இரண்டு படுக்கையறை கொண்ட வீட்டை வாங்குவதற்காகப் பார்வையிட்டனர். இரவில் தனித்தனி அறைகளில் உறங்கிய நிலையில், நள்ளிரவு 2.30 மணியளவில் தேஜஸ்வினி தாயார் தூங்கும் அறையை வெளிப்புறமாகப் பூட்டிவிட்டு, தனது உடைகளை அனைத்தும் களைந்துவிட்டு நிர்வாண நிலையில் வீட்டை விட்டு வெளியேறினார்.

பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ள அதிர்ச்சிகரமான காட்சிகளின்படி, அவர் பீரப்பா கோயிலுக்குள் நுழைந்து, கருவறையில் இருந்த அம்மாவாரு (அம்மன்) சிலையைத் தூக்கிக்கொண்டு ஏரியை நோக்கி ஓடியுள்ளார். பின்னர் சிலையுடன் ஏரியில் குதித்தார்.

அதிகாலையில் கண்விழித்த தாயார் அருணா, அறை பூட்டப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து கதவை உடைத்துத் திறந்தனர். வீட்டில் மகள் இல்லாததால் தேடியபோது, ஏரியில் பெண் உடல் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. பின்னர் அங்கு சென்ற ஹைதராபாத் பேரிடர் மீட்புக்குழு உடலை மீட்டது.

எனினும், தேஜஸ்வினி எடுத்துச் சென்ற அம்மன் சிலை இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. படகுகள் மூலம் ஏரியில் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. மனநலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்பதை மேடிபள்ளி காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் ஐடி துறையில் பணியாற்றும் இளம் பெண்களின் மன அழுத்தம் குறித்து மீண்டும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version