முதல்வர் விஜய் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை உயரதிகாரிகளுக்கான 2 ஆம் நாள் மாநாடு தொடங்கியது.

சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் அமைந்துள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் இரு நாள் முக்கிய மாநாடு நடைபெற்று வருகிறது. மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை உயரதிகாரிகள், சரக டிஐஜிக்கள், ஐஜிக்கள், அனைத்துத் துறை செயலாளர்கள் மற்றும் வனத்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ள இந்த மாநாட்டை மூன்று தனித்தனி அமர்வுகளாக நடத்த முதல்வர் விஜய் உத்தரவிட்டிருந்தார்.

இந்த ஆலோசனை மாநாடு மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு நிலவரத்தை வலுப்படுத்துவதோடு, அரசின் மக்கள் நலத் திட்டங்களை திறம்படச் செயல்படுத்துவதற்கான வழிமுறைகளை வகுக்கும் நோக்கத்துடன் நடைபெறுகிறது. நேற்று நடைபெற்ற முதல் அமர்வில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் இணைந்து பங்கேற்றனர். இதில் சட்டம்-ஒழுங்கு பிரச்னைகள் முதன்மை இடம் பெற்றன. குறிப்பாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள், செயின் பறிப்பு, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட சமூகப் பாதுகாப்பு சார்ந்த விவகாரங்கள் விரிவாக ஆய்வு செய்யப்பட்டன.

முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்ற இந்த அமர்வில், காவல்துறையின் செயல்திறனை அதிகரிப்பது, நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வது, பொதுமக்களிடையே காவல்துறை மீதான நம்பிக்கையை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து விரிவான விவாதம் நடைபெற்றது. உளவுத்துறை மூலம் தகவல்களைத் துரிதமாகச் சேகரிப்பது, நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பிடியாணைகளை விரைவாக நிறைவேற்றுவது, தொடர் குற்றவாளிகளை தீவிரமாகக் கண்காணிப்பது, ஜாமீனில் வெளியே வந்த ரவுடிகளின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவது, சாதி மோதல்களை முன்கூட்டியே கண்டறிந்து தடுப்பது போன்ற பல முக்கிய விவகாரங்கள் ஆலோசனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

ஒவ்வொரு மாவட்டத்தின் தனித்தன்மைக்கேற்ப சட்டம்-ஒழுங்கை பலப்படுத்த தேவையான உத்தரவுகளையும் முதல்வர் நேரடியாக வழங்கினார். பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு இந்த மாநாட்டின் மைய அம்சமாக இருந்தது. ‘சிங்கப்பெண்’ அதிரடிப்படையின் செயல்பாடுகள், போக்சோ வழக்குகளின் தற்போதைய நிலை, இணையவழி மோசடிகள் மற்றும் சைபர் குற்றங்கள் தொடர்பான அறிக்கைகள் விரிவாகப் பரிசீலிக்கப்பட்டன. மேலும், ‘போதைப்பொருள் இல்லாத தமிழகம்’ என்ற இலக்கை நோக்கிய நடவடிக்கைகள் குறித்தும் தீவிர விவாதம் நடைபெற்றது.

பள்ளி-கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனைக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகள், கள்ளச்சாராயம் ஒழிப்பு, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைத் தடை ஆகியவை குறித்து அதிகாரிகளிடம் முதல்வர் விளக்கமாகக் கேட்டறிந்தார்.முதல்வர் விஜய் அதிகாரிகளுக்கு வழங்கிய முக்கிய அறிவுரைகளில், “பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதில் தீவிர கவனம் செலுத்துங்கள். கட்சி அடையாளங்களுக்கு அப்பால் பொதுமக்களுக்கான அரசாகச் செயல்படுங்கள். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் போன்ற சோகங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க உறுதி கொள்ளுங்கள். அரசியல் தலையீடு இன்றி காவல்துறை தன்னிச்சையாகச் செயல்பட அனுமதியுங்கள்” என்று வலியுறுத்தினார். அரசுத் திட்டங்களை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்றும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இன்று காலை தொடங்கிய இரண்டாவது அமர்வில் மாவட்ட ஆட்சியர்கள் மட்டும் பங்கேற்றனர். அரசின் பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் பயனாளிகளைச் சென்றடைந்துள்ளனவா என்பது குறித்து விரிவான ஆய்வு நடைபெறுகிறது. திட்டச் செயல்பாட்டில் உள்ள நடைமுறை சிக்கல்களை அடையாளம் கண்டு அவற்றைத் தீர்க்கும் வழிமுறைகள் விவாதிக்கப்படுகிறது. ஒவ்வொரு துறையின் மாவட்ட அளவிலான செயல்பாடுகளையும் முதல்வர் நேரடியாக மதிப்பீடு செய்கிறார்.

இன்று மாலை நடைபெறும் மூன்றாவது அமர்வில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் இந்திய வனப்பணி (ஐஎப்எஸ்) அதிகாரிகள் இணைந்து பங்கேற்கின்றனர். வனப்பாதுகாப்பு, வனவிலங்குப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காடு சார்ந்த திட்டங்கள் மற்றும் மனித-விலங்கு மோதல்களைக் குறைக்கும் நடவடிக்கைகள் குறித்து விரிவான ஆலோசனை நடைபெறும். மாநாட்டின் நிறைவு அமர்வில் முதல்வர் விஜய் அதிகாரிகளுக்கு உரையாற்றவுள்ளார். அப்போது மாவட்ட நிர்வாகம், காவல்துறை மற்றும் வனத்துறையில் சிறப்பாகச் செயல்பட்ட அதிகாரிகளுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட உள்ளனர். இந்த மாநாடு தமிழகத்தின் நிர்வாக திறனை மேலும் வலுப்படுத்தும் முக்கிய முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version