பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாட்டின் மக்கள்தொகை 2027 -ம் ஆண்டு நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கும் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுவது வழக்கம். கடைசியாக 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 2021-ம் ஆண்டு நடத்தப்பட வேண்டியது, கொரோனா பெருந்தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. அதன் அலை ஓய்ந்துள்ள நிலையில் எப்போது நடத்தப்படும் என்று எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பி வந்தன.
கூடவே மக்கள்தொகை கணக்கெடுப்போடு சாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த வேண்டும் என பல கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தன. அதில் பதிலளித்த மத்திய அரசு அவ்வாறே செய்யப்படும் என்று கூறியிருந்தது.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இதன் ஒருபகுதியாக 2027-ல் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இதன்படி 2027-ம் ஆண்டு மார்ச் மாதம் 1-ந் தேதி முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஜம்மு காஷ்மீர், லடாக், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் நடப்பாண்டு அக்டோபர் மாதமே மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடங்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. இதன்மூலம் 2 கட்டங்களாக மக்கள்தொகை நடத்தப்படும் என்று தெரிகிறது.