சட்டமன்ற தேர்தலில் தமிழக பாஜகவின் பிரசார பணிகளை முன்னெடுப்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வரும் 8-ந் தேதி மதுரை வரவுள்ளார்.

தமிழக சட்டமன்றத்திற்கு தேர்தல் நடைபெற இன்னும் 10 மாதங்களே உள்ளன. இதனால் ஒவ்வொரு அரசியல் கட்சியும் தேர்தல் பணிகளை முழுவீச்சில் மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக ஆளுங்கட்சியான திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தேர்தல் பணிகளை ஏற்கனவே தொடங்கி விட்டதாக அறிவித்து இருந்தார். சமீபத்தில் ஜுன் 1-ந் தேதி மதுரையில் மிக பிரம்மாண்டமாக திமுக பொதுக்குழுவை நடத்திக் காண்பித்தார். அதில் 200 தொகுதிகளில் வெல்வதே திமுகவின் இலக்கு என்று கூறியிருந்தார். மேலும் ஒவ்வொரு தொகுதியிலும் 30 சதவித வாக்காளர்களை கொண்டு வருவதே இலக்கு என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மறுபுறம் எதிர்க்கட்சியான அதிமுக, 2026 தேர்தலில் வலுவான கூட்டணி அமைத்து திமுகவை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு செயலாற்றி வருகிறது. இதற்காக பல்வேறு மனக்கசப்புகளைத் தாண்டி, பாரதிய ஜனதாவுடன் கூட்டணி அமைத்தது. மேலும் தேமுதிக, பாமக போன்ற கட்சிகளை தங்கள் கூட்டணியில் தக்க வைக்க வியூகம் அமைத்து செயலாற்றி வருகிறது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, விரைவில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக எம்ஜிஆர் மாளிகை வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்நிலையில் தமிழக பாஜகவை வலுப்படுத்தும் நோக்கில், சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் மத்திய அமைச்சர் அமித் ஷா நேரடியாக தமிழ்நாட்டிற்குள் களமிறங்க உள்ளாராம். இதற்காக வரும் 8-ந் தேதி அமித் ஷா தமிழ்நாடு வரவுள்ளார். அன்றைய தினம், மதுரையில் தென்மாவட்ட பாஜக நிர்வாகிகளை சந்தித்து அவர் ஆலோசனை நடத்த உள்ளார்.

திமுக பொதுக்குழு நடத்திய பரபரப்பு அடங்குவதற்குள் மதுரைக்கு அமித் ஷா வருவது கூடுதல் முக்கியத்துவத்தை ஏற்படுத்தி உள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version