”புகை பிடித்தல் புற்று நோயை உண்டாக்கும்… மது அருந்துதல் உடல் நலத்திற்குத் தீங்கு… போதைப் பொருள் பயன்படுத்துதல் உடல் நலத்திற்குக் கேடு மற்றும் சட்டவிரோதக் குற்றமாகும்” என்றெல்லாம் சொல்லிவிட்டுத்தான் படங்களைத் திரையிடுகிறார்கள். ஆனால், இதெல்லாம் ரசிகர்களுக்குச் சொல்வதற்கு மட்டும்தான் போல என நினைக்க வைக்கும் அளவு திரையுலகில் இரண்டறக் கலந்திருக்கிறது போதைப் பொருள் பழக்கம். திரைத்துறை என்றாலே போதைப் பழக்கம் ஒட்டிக் கொள்ளும் என்று பரவலான கூற்றைச் சில சம்பவங்கள் உறுதி செய்துவிடுகின்றன. 

வெற்றிக் கொண்டாட்டம், கேளிக்கை விருந்துகள், நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிகள் என திரைத்துறையின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் மதுவும் புகையும் ஆறாய் ஓடுகிறது. ஆனால் போதைப் பொருள் பயன்படுத்திக் கையும் களவுமாகப் பிடிபடும்போதுதான்,  இவரெல்லாமா போதைப் பொருள் பயன்படுத்துவார் என்று நாம் ஆச்சர்யப்படும்படி ஆகிறது. அண்மையில் நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் பயன்படுத்திக் கைது செய்யப்பட்டிருப்பதும் அப்படிப்பட்ட கேள்வியைத்தான் எழுப்புகிறது. இந்த நேரத்தில் இந்தியாவில் போதைப் பொருள் பயன்படுத்தியதற்காகக் கைது செய்யப்பட்டிருக்கும் திரைப் பிரபலங்களின் பட்டியலைப்  பின்னோக்கிப் பார்க்கத் தோன்றுகிறது. 

பாலிவுட்டில் தவிர்க்கமுடியாத போதைப் பழக்கம்

இந்திய திரைத்துறையில் இந்தி மொழிப் படங்கள் வெளியாகும் பாலிவுட்டில் போதைப் பொருள் நுகர்ச்சி, தவிர்க்கமுடியாத கலாசாரம் ஆகிவிட்டது.  1982-ம் ஆண்டு இந்தியில் கொடி கட்டிப் பறந்த சஞ்சய் தத், போதைப் பொருள் பயன்படுத்தியதற்காகக் கைது செய்யப்பட்டார்.  பின்னர் அமெரிக்காவுக்குச் சென்று மறுவாழ்வு மையத்தில் சேர்ந்து பயிற்சி எடுத்து, போதைப் பழக்கத்திலிருந்து மீண்டார். அதேபோல் 2001-ல் மற்றுமொரு புகழ்பெற்ற இந்தி நடிகர் பெரோஸ் கானின் மகன் பரீத் கான் கொக்கைன் பயன்படுத்தியதற்காகக் கைது செய்யப்பட்டு, 12 ஆண்டுகள் மறுவாழ்வு மையத்தில் கழித்துப் பின் மீண்டார். 

சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம்

அப்போதெல்லாம் ஒன்றிரண்டாக மாட்டிக் கொண்டிருந்த போதைப் பொருள் பழக்கம், 2020-ம் ஆண்டு உயிரிழப்பு வரை சென்றது. இளைஞர்களின் ஆதர்ச நாயகன் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்துகொண்டார். அவர் மரணத்தில் அவரது முன்னாள் காதலி ரியா சக்கரவர்த்திக்குத் தொடர்பு உள்ளதாக சந்தேகித்து காவல்துறையினர் அவர் விட்டில் சோதனை போட்டபோது போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. சுஷாந்த் சிங் போதைப் பொருள் பயன்படுத்தி வந்ததாகவும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவில் வழக்கு உள்ளது. போதைப் பொருள் விவகாரத்தில்தான் அவருக்கும் அவரது காதலிக்கும் சண்டை ஏற்பட்டுப் பிரிந்ததாகவும், அவருக்கு போதைப் பழக்கத்தை அறிமுகப்படுத்தியதும் ரியா சக்கரவர்த்திதான் என்றும் பல்வேறு கதைகள் கூறப்படுகின்றன. ஆனால், சுஷாந்த் சிங் ராஜ்புத் போதைப் பொருள் பழக்கமுள்ளவர் என்ற செய்தி ரசிகர்களை அதிரடித்தது.

ஷாருக் கான் மகன் ஆரியன் கான்

கடந்த 2021-ம் ஆண்டு மும்பையிலிருந்து கோவா சென்ற சொகுசுக் கப்பல் ஒன்றில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் நடத்திய சோதனையின்போது கொக்கைன் பயன்படுத்தியதாக 14 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் பாலிவுட்டின் கிங் கான் என்று அழைக்கப்படும் ஷாருக் கானின் மகன் ஆரியன் கானும் ஒருவர். கைது செய்யப்பட்டு 28 நாட்கள் சிறையில் இருந்த பிறகு ஜாமினில் விடுவிக்கப்பட்டார், ஆரியன் கான். அவரது செல்போன் பறிமுதல் செய்யப்பட்டபோது நடிகை அனன்யா பாண்டே உட்பட திரைத்துறையினர் பலருடன் போதைப் பொருள்கள் தொடர்பாக அவர் உரையாடிய வாட்ஸ்ஆப் மெசேஜுகள் கிடைத்தன. 

கங்கனா ரனாவத்தின் சர்ச்சைப் பதிவு 

நடிகர்கள் மட்டுமின்றி ஷ்ரத்தா கபூர், தீபிகா படுகோனே, சாரா அலி கான், சஞ்சனா கல்ராணி உட்பட நடிகைகளும் போதைப் பொருள் சர்ச்சைகளில் சிக்கியுள்ளனர். மனிஷா கொய்ராலா, கங்கனா ரனாவத் போன்ற புகழ்பெற்ற நடிகைகளும் தங்களுக்குப் போதைப் பொருள் இருந்ததாகவும், அதிலிருந்து மீண்டதாகவும் ஒப்புக் கொண்டுள்ளனர். இந்த நிலையில், 2020-ம் ஆண்டு பாலிவுட்டில் 99 சதவீதம் பேர் ஒருமுறையாவது போதைப் பொருளைப் பயன்படுத்தாமல் இருந்ததில்லை. பெரிய நடிகர்களின் ரத்த மாதிரிகளைப் பரிசோதித்துப் பார்த்தால் யார் சுத்தமானவர் என்பது தெரியும் என்று சர்ச்சையாக வீடியோ ஒன்றைப் பதிவு செய்திருந்தார். அது அப்போது பேசுபொருளானது. 

தென் சினிமாவுக்குள்ளும் போதைப் பழக்கம்

இப்படி பாலிவுட்டில் நீக்க முடியாத கேடாக போதைப் பொருள் பழக்கம் இருக்கும் நிலையில், மலையாளம், தெலுங்கு, கனடா திரையுலகிலும் போதை கலாசாரம் ஊடுருவத் தொடங்கியிருக்கிறது. மலையாள சினிமாவிலும் போதைப் பொருள் பயன்படுத்தியதால் அண்மையில் நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது செய்யப்பட்டு, ஜாமினில் விடுவிக்கப்பட்டார். உலகப் புகழடைந்து வரும் ராப் பாடகர் வேடன் கூட கஞ்சா பயன்படுத்தியதற்காக கைது செய்யப்பட்டார்.  கடந்த ஆண்டு தமிழ் நடிகர் மன்சூர் அலிகானின் மகன் துக்லக் அலி கான் போதைப் பொருள் பயன்படுத்தியதற்கும் விற்பனையில் ஈடுபட்டதற்கும் கைது செய்யப்பட்டார். அந்த வரிசையில்தான் நம்ப முடியாத நபராக ஸ்ரீகாந்த் இணைந்திருக்கிறார். 

பேராபத்தை உருவாக்கும் போதைப் பழக்கம்

நரம்பு மண்டலத்தை முற்றிலும் செயலிழக்கச் செய்து மந்த நிலைய உடலில் உருவாக்கும் செயற்கை போதைப் பொருட்கள், உடல் நலத்தை மிகவும் பாதிக்கும் என்று மருத்துவர்கள் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். உடல் ரீதியாக மட்டுமின்றி மன ரீதியாவும் மனவலிமை இல்லாத மனிதராக போதைப் பழக்கம் மாற்றும் என்று எச்சரிக்கப்படுகிறது. திரைத்துறை பிரபலம், அதிகமாக நிரம்பி வழியும் பணமும் பொருளும் நடிகர் சமூகத்தை போதைப் பழக்கத்தில் தள்ளுகிறது. இந்தித் திரையுலகம் மொத்தமும் அதற்கு அடிமையாக ஆகிவிட்ட நிலையில், தமிழ்ச் சமூகத்திற்கும் அந்தப் பேராபத்து பரவுவது வேதனை அளிப்பதாகவே ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version