நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதிச்சுற்று ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி) அணி அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ஐபிஎல் வரலாற்றில் பெங்களூரு அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது இது இரண்டாவது முறையாகும்.

டாஸ் வென்ற பெங்களூரு பந்துவீச்சு தேர்வு:

பஞ்சாப் மாநிலம் முல்லான்பூர் நகரில் நடைபெற்ற இந்த முதலாவது தகுதிச்சுற்றுப் போட்டியில், லீக் போட்டிகளின் அடிப்படையில் புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் படிதார், முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

பஞ்சாப் திணறல் பேட்டிங்:

முதலில் பேட்டிங் செய்யக் களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான பிரியன்ஷ் ஆர்யா – பிரப்சிம்ரன் சிங் ஜோடி, நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பான தொடக்கத்தை அளித்து வந்த நிலையில், இந்தப் போட்டியில் தடுமாறியது. பெங்களூரு அணியின் யாஷ் தயாள் பந்துவீச்சில், பிரியன்ஷ் ஆர்யா வெறும் 7 ரன்களுக்கு அவுட்டானார். அடுத்து, 18 ரன்கள் சேர்த்த பிரப்சிம்ரன் சிங், புவனேஷ் குமார் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

பஞ்சாப் அணியின் நம்பிக்கை நட்சத்திரமான கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், அணிக்குத் திரும்பிய ஹேசில்வுட் பந்துவீச்சில் வெறும் 2 ரன்களுக்கு ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். அடுத்து வந்த அதிரடி ஆட்டக்காரர் ஜோஷ் இங்கிலீஸ் வெறும் 4 ரன்களுக்கு அவுட்டாகி வெளியேறினார். மார்கஸ் ஸ்டெய்னிஸ் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து 26 ரன்கள் சேர்த்தார். ஓமராசி 18 ரன்கள் எடுத்தார். எஞ்சிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, 14.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்த பஞ்சாப் அணி வெறும் 101 ரன்களை மட்டுமே எடுத்தது.

பெங்களூருவின் அசத்தல் பந்துவீச்சு:

பெங்களூரு தரப்பில் ஹேசில்வுட் மற்றும் சுயாஷ் ஷர்மா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர். யாஷ் தயாள் 2 விக்கெட்டுகளையும், புவனேஷ் குமார் மற்றும் ஷெப்பர்டு தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

மிரட்டிய பில் சால்ட் – பெங்களூரு வெற்றி:

பின்னர் 102 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் பெங்களூரு தொடக்க வீரர்கள் விராட் கோலி, பில் சால்ட் ஆகியோர் களமிறங்கினர். விராட் கோலி 12 ரன்கள் எடுத்த நிலையில் ஜேமிசன் பந்தில் அவுட்டானார். அடுத்து வந்த மயங்க் அகர்வால் 19 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் அதிரடியாக ஆடிய பில் சால்ட், பஞ்சாப் அணியின் பந்துவீச்சைத் துவம்சம் செய்தார். அவர் வெறும் 23 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். அவருடன் ஜோடி சேர்ந்த கேப்டன் ரஜத் படிதார் சிக்சர் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். இதன்மூலம் பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக சுயாஷ் ஷர்மா தேர்வு செய்யப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய முதல் அணி என்ற பெருமையை பெங்களூரு பெற்றுள்ளது. இதற்கு முன்னர் 2016-ஆம் ஆண்டு இறுதிப்போட்டிக்கு முன்னேறிய பெங்களூரு அணி, அப்போது தோல்வியைத் தழுவியது. இந்தமுறை “ஈ சாலா கப் நம்தே” என்ற முழக்கத்தை பெங்களூரு அணி உண்மையாக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Share.
Leave A Reply

Exit mobile version