ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே மூண்டுள்ள நேரடி போர் பதற்றம் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஈரானின் முக்கிய ராணுவ நிலைகள் மற்றும் அணுசக்தி மையங்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதியற்ற சூழல் நிலவுகிறது. இந்த விவகாரத்தில் சர்வதேச நாடுகள் தங்கள் கவலையைத் தெரிவித்து வரும் நிலையில், இந்திய அரசும் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறது.

மத்திய கிழக்கு ஆசியாவில் நிலவும் இந்த அசாதாரண சூழலால் இந்தியாவில் ஏதேனும் சட்டம் ஒழுங்கு பாதிப்புகள் அல்லது பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் ஏற்படக்கூடும் என மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில அரசுகளுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. குறிப்பாக, பதற்றமான பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்தவும், வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் முக்கிய நிறுவனங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த சூழலில் மத்திய உள்துறை அமைச்சகமானது மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் காவல்துறை தலைமை இயக்குநர்களுக்கு (DGP) கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

அதில், ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் ஷியா பிரிவு அமைப்புகள் மற்றும் ஈரான் ஆதரவு குழுக்கள் போராட்டங்களில் ஈடுபட வாய்ப்புள்ளது. எனவே, அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் தூதரகங்களுக்குப் பலத்த பாதுகாப்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

வன்முறையைத் தூண்டும் வகையில் உரையாற்றும் “ஈரான் ஆதரவு தீவிரவாதப் பேச்சாளர்களை” (Pro-Iran radical preachers) அடையாளம் கண்டு அவர்கள் மீது கடும் கண்காணிப்பு செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் பரப்பப்படும் வதந்திகள் மற்றும் வன்முறையைத் தூண்டும் கருத்துகளைக் கண்காணிக்கவும், ஈரான் ஆதரவு மாணவர் அமைப்புகள் மற்றும் சமூக-அரசியல் இயக்கங்களின் செயல்பாடுகளைத் தீவிரமாக கவனிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், ஈரானில் வசிக்கும் இந்திய மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வெளியுறவுத்துறை அமைச்சகம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அங்குள்ள இந்தியர்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறும், இந்தியத் தூதரகத்தின் தொடர்பில் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் பொருளாதார தாக்கம் குறித்து ஆலோசிக்க பிரதமர் தலைமையில் உயர் மட்டக் குழு கூட்டமும் நடத்தப்பட்டு வருகிறது.


Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version