இந்தியாவில் பாதுகாப்புத் துறையை மேம்படுத்தும் நோக்கில், விமானத் தயாரிப்பு, பீரங்கி மற்றும் கடற்படைத் தளங்களைத் தொடர்ந்து தற்போது அதிநவீன ஏவுகணைத் தயாரிப்பையும் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்க மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய ஆயுதப் படைகள் மட்டுமின்றி, இந்தியாவின் நட்பு நாடுகளிடமிருந்தும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் ஏவுகணைகளுக்கான தேவை கணிசமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, இந்தோனேசியா போன்ற வெளிநாடுகள் இந்தியாவின் ‘அஸ்ட்ரா’ ஏவுகணைகளை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளன.
தற்போது ஏவுகணைகளை உற்பத்தி செய்து வரும் பொதுத்துறை நிறுவனமான பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் (BDL) நிறுவனத்தால் இந்த அதீத தேவையை முழுமையாகப் பூர்த்தி செய்ய இயலவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாகவே உற்பத்தியைப் பன்மடங்கு பெருக்கத் தனியார் துறையை உள்ளே கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகக் தெரிகிறது.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) உருவாக்கிய அதிநவீன ஏவுகணைகளின் தொழில்நுட்பங்கள் முதற்கட்டமாகத் தனியாருக்கு மாற்றப்பட உள்ளன. சுமார் 180 முதல் 200 கி.மீ தூரம் வரை பாய்ந்து சென்று இலக்கைத் தாக்கும் அஸ்ட்ரா மார்க் 2 வான்வழி ஏவுகணையைத் தயாரிக்கும் ஒப்பந்தம் விரைவில் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அஸ்ட்ரா திட்டத்தைத் தொடர்ந்து, சுமார் 500 கி.மீ. தூரம் வரை பாயும் திறன்கொண்ட குறுகிய தூரப் பாலிஸ்டிக் ஏவுகணையான பிரளய் ஏவுகணையின் தொழில்நுட்பமும் தனியார் வசம் ஒப்படைக்கப்படத் திட்டமிடப்பட்டுள்ளது. இது ஒலியின் வேகத்தைப் போல் 6 மடங்கு வேகத்தில் பயணிக்கக்கூடிய இரு-கட்ட ஏவுகணையாகும்.
மத்திய அரசின் இந்த உள்நாட்டு உற்பத்தி மேம்பாட்டுத் திட்டத்திற்கு ஏற்ப, அண்மையில் மத்தியப்பிரதேசத்தின் சிவபுரியில் சுமார் 2,500 கோடி ரூபாய் முதலீட்டில் தெற்காசியாவின் மிகப்பெரிய தனியார் ஏவுகணை உற்பத்தி மையத்தை அமைப்பதற்கான பணிகளை ‘அதானி டிஃபென்ஸ் அண்ட் ஏரோஸ்பேஸ்’ நிறுவனம் தொடங்கியுள்ளது இங்குக் குறிப்பிடத்தக்கது.
