தமிழக முதலமைச்சர் விஜய் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம் நீண்ட எதிர்பார்ப்புகளுக்குப் பிறகு இன்று (ஜூலை 23) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

தணிக்கை வாரியத்தின் பல்வேறு இழுபறிகளுக்குப் பின் இப்படத்திற்கு ‘ஏ’ (A) சான்றிதழ் வழங்கப்பட்டு, ஜூலை 23-ம் தேதி திரைக்கு வரும் எனத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. அதன்படி, இன்று அதிகாலை முதலே தமிழகம் முழுவதும் உள்ள முக்கியத் திரையரங்குகளில் ரசிகர்கள் பாலாபிஷேகம், பட்டாசு வெடித்தல் மற்றும் பேனர்கள் அமைத்துத் திருவிழா போலக் கொண்டாடி வருகின்றனர்.

உலகம் முழுவதும் 3,000-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இத்திரைப்படம் பிரம்மாண்டமாகத் திரையிடப்பட்டுள்ளது. தவெக தலைவர் விஜய், அரசியலில் முழுமையாகக் களம் இறங்கி முதல்வரான பிறகு திரைக்கு வரும் திரைப்படம் என்பதால், ரசிகர்கள் மட்டுமின்றி அரசியல் மற்றும் திரை உலக வட்டாரங்களிலும் இப்படத்திற்குப் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களிலேயே பெரும்பாலான திரையரங்குகளில் முதல் வாரக் காட்சிகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்து சாதனை படைத்துள்ளன. திரையரங்குகளில் பாதுகாப்பு வசதிகள் பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ‘ஜனநாயகன்’ திரைப்படத்தைக் காண ரசிகர்களின் கூட்டம் அலைமோதி வருகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version