டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் மீது டெல்லி காவல்துறை அதிகப்படியான வன்முறையைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக, உச்ச நீதிமன்றம் வரும் திங்கள்கிழமை (ஜூலை 27) விசாரணை நடத்த ஒப்புதல் அளித்துள்ளது.

நீட் (NEET-UG 2026) வினாத்தாள் கசிவு மற்றும் கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமா உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (CJP) சார்பில் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைபெற்று வந்தது.

ஜூலை 20-ம் தேதி போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாகச் சென்றபோது, காவல்துறையினருக்கும் மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. காவல்துறையினர் தடியடி நடத்தியது, கண்ணீர்ப்புகைக் குண்டுகளைப் பயன்படுத்தியது மற்றும் அமைதியான முறையில் போராடிய மாணவர்கள் மீது வன்முறையைப் பயன்படுத்தியது குறித்து நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

முன்னதாக, ஜூலை 22 அன்று இதுதொடர்பான அவசர விசாரணை கோரிக்கையை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் நிராகரித்து, நீதிமன்றத்தின் நேரத்தை வீணாக்க வேண்டாம் என்று கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில், தற்போது முறையான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வரும் திங்கள்கிழமை (ஜூலை 27) இந்த வழக்கை விசாரிக்க நீதிமன்றம் சம்மதம் தெரிவித்துள்ளது.

இதனிடையே போராட்டம் குறித்து டெல்லி உயர் நீதிமன்றத்திலும் பொதுநல மனுக்கள் விசாரணையில் உள்ளன. போராட்டக்காரர்கள் டெல்லியை முடக்கிவிட்டதாகவும், சாலைகளை மறித்து இடையூறு செய்வதாகவும் சில தரப்பினர் குற்றம்சாட்டியுள்ளநிலையில், காவல்துறை தனது நடவடிக்கை சட்டம்- ஒழுங்கைப் பாதுகாப்பதற்காகவே மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version