திமுக சின்னத்தில் போட்டியிட்டது துரதிர்ஷ்டம் என மதிமுக எம்.பி துரைவைகோ கூறியுள்ள நிலையில், திமுக கூட்டணியில் பயணிக்கும் பேராசிரியர் ஜவாஹிருல்லாவும் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, மனித நேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா சந்தித்துப் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பக்ரீத் பண்டிகையன்று மாடு, கன்றுகள் பலியிடுவதற்கு நீதிமன்ற வழக்கை காரணம் காட்டி த.வெ.க அரசு தடுத்ததை மமக கண்டிப்பதாகத் தெரிவித்தார்.
அதிமுக எம்.எல்.ஏக்கள் மூவர் தவெகவுக்கு மாறியதைச் சுட்டிக்காட்டி, சென்னை தலைமை செயலகம் ஒரு அரசியல் கட்சியின் தலைமை செயலகம் போல் செயல்படுவதாக விமர்சித்தார்.
திமுக சின்னத்தில் போட்டியிடுவது, துரதிர்ஷ்டம் எனக் கூறிய துரைவைகோவின் கருத்து தொடர்பான கேள்விக்கு, மனித நேய மக்கள் கட்சி தனி சின்னத்தில் போட்டியிடவில்லை என்கிற வருத்தம் எங்களுக்கு இல்லை,
வைகோவும், துரை வைகோவும் ஏன் இப்படி பேசுகிறார்கள் என தெரியவில்லை எனக் கூறினார்.
கூட்டணியில் தனி சின்னம் தொடர்பாக திமுகவை குறை சொல்ல முடியாது எனத் தெரிவித்த ஜவாஹிருல்லா, கட்சி பதிவு குறித்த நீதிமன்ற வழக்கில் சொந்த சின்னத்தில் நிற்பதாக நாங்கள் ஏற்கனவே நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளோம். அதன் அடிப்படையில் தனி சின்னத்தில் இனி வரும் தேர்தல்களை சந்திப்போம் எனத் தெரிவித்தார்.
