தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக விளங்குபவர் ரவிமோகன். ஜெயம் படத்தில் தனது திரைவாழ்வை தொடங்கிய அவர் அதன் காரணமாகவே ஜெயம் ரவி என அழைக்கப்பட்டார். ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது பெயரை ரவிமோகன் என மாற்றிக் கொண்டார்.
திரைப்படங்களில் வெற்றிநாயகனாக வலம்வந்த அவரது சொந்த வாழ்க்கையில் புயல் வீசியது. 2009-ம் ஆண்டு ஆர்த்தி என்பவருடன் ரவிக்கு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஆரவ் மற்றும் ஆயான் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். மகிழ்ச்சிகரமாக சென்று கொண்டிருந்த அவர்களின் வாழ்வினில் சில வருடங்களாக கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து கடந்த ஆண்டு தனது மனைவியை பிரிவதாக ரவி மோகன் அறிவித்தார்.
இந்நிலையில் கெனிஷா என்ற நடனக்கலைஞருடன் ரவி மோகன் இணைந்து வாழ்வதாக தகவல்கள் வெளியாகின. அதற்கு தகுந்தார்போல் அவரும் பொதுநிகழ்ச்சிகளில் சமீபமாக கெனிஷாவுடன் தென்பட்டார். இதுகுறித்து ஆர்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில், இரண்டு பிள்ளைகளின் தகப்பன் என்பதை ரவிமோகன் மறுக்க முடியாது என்று பதிவிட்டிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும்விதமாக ரவிமோகன் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தோழியாக அறிமுகமான கெனிஷா என் வாழ்வின் அழகான துணை என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அனைத்தையும் இழந்தபோது என்னோடு உடன் இருந்தவர் கெனிஷா என்றும் எனது பிரச்னைகள் அனைத்தும் கெனிஷாவுக்கு தெரியும் என்றும் அதில் கூறியுள்ளார்.
எனது கண்ணியத்தை கேள்விக்குள்ளாக்குவதா? என்று அந்த பதிவில் நடிகர் ரவி மோகன் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார். கடந்தகால திருமண வாழ்க்கையை மலிவான அனுதாபம் தேடுவதை அனுமதிக்க முடியாது என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.
இத்தனை ஆண்டாக முதுகில் குத்தப்பட்டேன்; இப்போது நெஞ்சில் குத்தப்பட்டுள்ளேன் அந்தவகையில் நன்றி என்று தனது ட்விட்டர் பதிவில் ரவி மோகன் கூறியுள்ளார். காயங்களை உணராமல் எனது கண்ணியத்தை கேள்விக்குள்ளாக்குவதால் நான் பேச வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் விளக்கம் அளித்துள்ளார். ஆண்களும் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர் என்பதை தைரியமாக கூறுகிறேன் என்றும்
திருமண வாழ்வை காப்பாற்ற நான் கடும் போராட்டங்களை சந்தித்தேன் என்றும் ரவி மோகன் தெரிவித்துள்ளார்.
எனது குழந்தைகளை வைத்து பொதுவான சித்தரிப்பு மூலம் நிதி ஆதாயம் அடைய முயற்சி என்றும் நடிகர் ரவிமோகன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ரவி மோகனின் மனைவி ஆர்த்தியும் சினிமா பின்புலம் கொண்டவர் தான். அவரது தாயார் சுஜாதா, 1980-களில் திரைப்படங்களில் நடித்தவர். மேலும் படபிடிப்புத் தளங்களை வாடகைக்கு விடும் தொழிலும் செய்து வந்தார். அவரது நெருக்கடியே ரவிமோகன் – ஆர்த்தி இடையே பிணக்கு ஏற்பட காரணம் என்று கூறப்படுகிறது.