இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்டர் ஜெமிமா ரோட்ரிக்ஸ், காயம் காரணமாக ‘தி ஹண்ட்ரட் 2026’ (The Hundred 2026) தொடரிலிருந்து விலகியுள்ளார். இதனால் விரைவில் நடைபெறவுள்ள ‘மகளிர் ஆசியக் கோப்பை’ தொடரில் அவர் பங்கேற்பதும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ‘தி ஹண்ட்ரட்’ தொடரில் சவுதர்ன் பிரேவ் (Southern Brave) அணிக்காக விளையாடி வந்த ஜெமிமா ரோட்ரிக்ஸுக்கு தொடையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.

அவருக்குப் பதிலாக ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் சார்லி நாட் (Charlie Knott) சவுதர்ன் பிரேவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தத் தொடரில் சவுதர்ன் பிரேவ் அணிக்காக 6 இன்னிங்ஸ்களில் விளையாடிய ஜெமிமா, 143 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகஸ்ட் 28-ஆம் தேதி மகளிர் ஆசியக் கோப்பை தொடர் தொடங்க உள்ளது. இந்தியா தனது முதல் போட்டியில் ஆகஸ்ட் 30 அன்று தாய்லாந்தை எதிர்கொள்கிறது. தொடை நரம்பு காயத்தில் இருந்து மீண்டு வர ஜெமிமாவுக்குக் குறைந்தபட்சம் ஒரு மாதம் வரை தேவைப்படும் என்பதால், ஆசியக் கோப்பை தொடங்குவதற்குள் அவர் முழு உடற்தகுதி பெறுவாரா என்பது கேள்விகுறியாகியுள்ளது.

இந்திய மகளிர் அணியில் மிக முக்கியமான பேட்டராக திகழும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஆசியக் கோப்பையில் விளையாட முடியாமல் போனால், அது இந்திய அணிக்குப் பெரும் பின்னடைவாக அமையும். ஒருவேளை அவர் தொடரிலிருந்து விலகும் பட்சத்தில், அவருக்குப் பதிலாக பிரதிகா ராவல் அல்லது யாஸ்திகா பாட்டியா ஆகிய இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்க அதிக சாத்தியக்கூறுகள் உள்ளன.

தற்போது சவுதர்ன் பிரேவ் அணி விளையாடிய 6 போட்டிகளில் 5-இல் வெற்றி பெற்று 20 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. அணி சிறப்பாகச் செயல்பட்டு வந்தாலும், ஜெமிமாவின் விலகல் எஞ்சிய போட்டிகளில் சவுதர்ன் பிரேவ் அணிக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version