கடந்த 2013ம் ஆண்டு ஜூன் 23ம் தேதி இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் தன் வாழ்நாளில் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாத ஒரு பொன்னான நாள். இங்கிலாந்தின் பர்மிங்காம் மைதானத்தில், அதன் சொந்த மண்ணிலேயே இங்கிலாந்து அணியை வீழ்த்தி, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி (ICC Champions Trophy) கோப்பையை முத்தமிட்டது மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணி.
பர்மிங்காமில் பெய்த பலத்த மழையின் காரணமாக, 50 ஓவர்கள் கொண்ட இறுதிப் போட்டி 20 ஓவர்கள் கொண்ட ஆட்டமாக குறைக்கப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு இங்கிலாந்தின் பந்துவீச்சு கடும் சவாலாக இருந்தது. ஷிகர் தவான் (31), விராட் கோலி (43), மற்றும் ரவீந்திர ஜடேஜா (33*) ஆகியோரின் போராட்டத்தால், இந்தியா 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் மட்டுமே எடுத்தது.
130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து அணி, இந்திய அணியின் துல்லியமான பந்துவீச்சால் 46 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. இருப்பினும், இங்கிலாந்தின் இயான் மோர்கன் மற்றும் ரவி போபாரா ஜோடி அதிரடியாக விளையாடி இந்திய அணியின் கைகளில் இருந்த வெற்றியை பறிக்க முயன்றது.
கடைசி 16 பந்துகளில் இங்கிலாந்து அணிக்கு வெறும் 20 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. கைவசம் விக்கெட்டுகளும் இருந்ததால் இங்கிலாந்து அணி எளிதில் வென்றுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில், ‘கேப்டன் கூல்’ தோனியின் அந்த சமயோசித மாஸ்டர் பிளான் அரங்கேறியது.
அதுவரை ரன்களை வாரி வழங்கியிருந்த இஷாந்த் சர்மாவை 18-வது ஓவரை வீச தோனி அழைத்தார். அந்த ஓவரின் மூன்றாவது பந்தில் மோர்கனையும், அடுத்த பந்திலேயே ரவி போபாராவையும் வீழ்த்தி அசத்தினார் இஷாந்த் சர்மா. தோனியின் இந்த வியூகத்தால் ஒரே ஓவரில் ஆட்டம் இந்தியாவின் பக்கம் திரும்பியது. கடைசி ஓவரில் அஸ்வின் மிகக் கச்சிதமாக பந்துவீச, இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றது.
இந்த வெற்றியின் மூலம், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் மூன்று முதன்மை கோப்பைகளையும் (2007-ல் டி20 உலகக் கோப்பை, 2011-ல் ஒருநாள் உலகக் கோப்பை, 2013-ல் சாம்பியன்ஸ் டிராபி) வென்ற உலகின் முதல் மற்றும் ஒரே கேப்டன் என்ற இமாலய சாதனையை எம்.எஸ்.தோனி படைத்தார். இந்த வரலாற்று சாதனை நிகழ்ந்து ஆண்டுகள் பல கடந்தாலும், தோனியின் அந்த சாதுரியமான கேப்டன்சி இன்றும் ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்துள்ளது.
