காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்தில் ‘We the Leaders’ அமைப்பின் சார்பில் ‘போதையில்லா காஞ்சிபுரம்’ என்ற தலைப்பில் போதைப்பொருட்களுக்கு எதிரான பிரமாண்ட விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு எதிராக சமூகத்தை திரட்டும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில், அமைப்பினர் வெள்ளைப் பட்டை அணிந்து, போதையில்லா சமுதாயத்தை உருவாக்க உறுதிமொழி ஏற்றனர்.

இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் எண்ணிக்கையில் கலந்துகொண்ட இப்பேரணி, சுங்குவார்சத்திரம் மொளச்சூர் சாலையில் தொடங்கி, நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று, சுங்குவார்சத்திரம் பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது. சுமார் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இப்பேரணியில், “போதையை ஒழிப்போம்; இளைஞர்களை காப்போம்”, “குடும்பங்களை பாதுகாப்போம்”, “போதையில்லா தமிழ்நாட்டை உருவாக்குவோம்”, “வலிமையான இந்தியாவை கட்டியெழுப்புவோம்” போன்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

பங்கேற்பாளர்கள் கையில் ஏந்திய பதாகைகள் மற்றும் போஸ்டர்களில் போதைப்பொருட்களின் ஆபத்துகள் குறித்து வலியுறுத்தப்பட்டிருந்தது. இந்நிகழ்வு மூலம் இளைஞர்கள் மத்தியில் போதைப்பழக்கத்தின் தீமைகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், குடும்ப அமைப்புகளையும், சமூகத்தையும் பாதுகாக்கும் நோக்கம் வலியுறுத்தப்பட்டது. போதை ஒழிப்பு இயக்கங்கள் மூலம் தமிழ்நாட்டை முழுமையாக போதையில்லாத மாநிலமாக மாற்ற வேண்டும் என்பதே அமைப்பினரின் முக்கிய கோரிக்கையாகும்.

இப்பேரணி பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. பலரும் தாங்களும் இந்த இயக்கத்தில் இணைந்து போதை ஒழிப்புக்கு ஆதரவு தருவதாக உறுதி அளித்தனர். ‘We the Leaders’ அமைப்பினர் இத்தகைய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி, இளம் தலைமுறையினரை போதைப்பொருட்களின் பிடியில் இருந்து மீட்டெடுக்க உறுதியுடன் செயல்படுவதாக தெரிவித்தனர். இந்த முயற்சி காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் போதை ஒழிப்பு இயக்கத்துக்கு புதிய உத்வேகம் அளிப்பதாக அமைந்துள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version