தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள நடிகர் ஜோசப் விஜய், தனது அரசு முழுக்க மதச்சார்பற்றதாக இயங்கும் என உறுதியளித்த நிலையில், அவரது தலைமை செயலக அலுவலகத்தில் மத அடையாளம் இடம் பெற்றிருப்பது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. மக்கள் தொகை சுய கணக்கெடுப்பு குறித்த விழிப்புணர்வு வீடியோவில், விஜய் தனது ஆப்பிள் லேப்டாப்பில் தகவல்களை பதிவு செய்யும் காட்சிகள் இடம் பெற்றன.

இந்த வீடியோவில் முதல்வரின் மேஜையின் இடது பக்கத்தில் சிறிய அளவிலான கிறிஸ்து சிலுவை (கிருஸ்) ஒன்று தெளிவாகத் தெரிந்தது. இந்தக் காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவியதைத் தொடர்ந்து, அரசு அலுவலகங்களில் மதச் சின்னங்களை வைப்பது பொருத்தமானதா எனும் விவாதம் எழுந்துள்ளது.

ஒரு தரப்பினர், “முதல்வரின் தனிப்பட்ட நம்பிக்கைக்கு மதிப்பளிக்க வேண்டும். சிறிய அளவில், பிறருக்குத் தெரியாத வகையில் வைத்திருப்பதில் தவறில்லை” என்கின்றனர். மற்றொரு தரப்பு, “முதல்வர் பதவி அனைத்து மதத்தினருக்கும் பொதுவானது. அரசு அலுவலகத்தில் மத அடையாளங்களை வெளிப்படுத்தாமல் இருப்பது நல்லது” என விமர்சிக்கின்றனர்.

இந்த விவகாரத்தில் திமுக முன்னாள் எம்.பி செந்தில் குமார் கடுமையான விமர்சனம் முன்வைத்துள்ளார். அவர் எக்ஸ் தளத்தில், “1968-ல் முதல்வர் அண்ணாதுரை அரசு அலுவலகங்களில் கடவுள் படங்கள், சிலைகளை அகற்ற உத்தரவிட்டார். 1993-ல் ஜெயலலிதா அரசு ஊழியர்கள் வழிபாட்டைத் தடை செய்யும் வகையில் அலுவலகக் கையேட்டைத் திருத்தினார். மதச்சார்பற்றவராக இருங்கள் விஜய்” எனப் பதிவிட்டார். இந்தப் பதிவுக்கு ஆதரவும் எதிர்ப்பும் குவிந்து வருகின்றன.

ஆதரவாளர்கள், “மதச்சார்பின்மையை மேஜையில் தேட வேண்டாம். செயல்பாட்டைப் பாருங்கள். விஜய் அனைத்து மதப் பண்டிகைகளுக்கும் வாழ்த்து தெரிவிக்கிறார். தேர்தல் பிரசாரத்தின்போது திருச்சியில் அம்மன் கோயில், மசூதி, தேவாலயம் ஆகியவற்றுக்குச் சென்றார். தேர்தல் முடிவுக்கு முன் திருச்செந்தூர் முருகன் கோயில் மற்றும் ஷீரடி சாய்பாபா கோயிலுக்கும் விஜய் சென்று வழிபட்டார்” எனச் சுட்டிக்காட்டுகின்றனர்.

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது கட்சி அலுவலகத்தில் சாமி படங்களை வைத்திருந்ததையும் அவர்கள் நினைவூட்டுகின்றனர். முதல்வர் விஜய் தனது அரசியல் பயணத்தின் தொடக்கத்திலிருந்தே கடவுள் நம்பிக்கையாளராகவே தன்னை அடையாளப்படுத்தி வருகிறார். எனினும், அரசு நிர்வாகத்தில் மதச்சார்பின்மையை உறுதி செய்வார் என அவர் வாக்குறுதி அளித்துள்ளார். இந்தச் சிறிய சிலுவை சம்பவம், தமிழக அரசியலில் மதம் – அரசு பிரிப்பு குறித்த பழைய விவாதத்தை மீண்டும் முன்னுக்கு கொண்டு வந்துள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version