நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் மாஞ்சோலை என்ற பகுதியில் தனியார் தேயிலை எஸ்டேட் செயல்பட்டு வந்தது சுமார் 96 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த இந்த மாஞ்சோலை தேயிலை எஸ்டேட் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

இந்த வனப்பகுதி 100 ஆண்டுகளுக்கு முன்பு வரை சிங்கம்பட்டி ஜமீன் கட்டுப்பாட்டில் இருந்தது.1929 ஆம் ஆண்டு முதல் 2028 ஆண்டு வரை 100 ஆண்டுகள் இங்கு தேயிலை எஸ்டேட் அமைக்க மும்பையை சேர்ந்த பிபிடிசி என்ற தனியார் நிறுவனத்துக்கு ஜமீன் குத்தகைக்கு நிலம் வழங்கினார்.

இதையடுத்து பிபிடிசி நிறுவனம் மாஞ்சோலை மற்றும் அருகில் உள்ள ஊத்து நாலுமுக்கு காக்காச்சி ஆகிய இடங்களில் தேயிலை எஸ்டேட்டை உருவாக்கி தொழிலாளர்களை பணியமர்த்தியது. ஆரம்பத்தில் இங்கு இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்தனர்

நாளடைவில் சிங்கம்பட்டி ஜமீன் உயிரிழந்தார். பின்னாளில் நாடு முழுவதும் ஜமீன் முறை ஒழிக்கப்பட்டு ஜமீன்களுக்கு சொந்தமான நீலங்கள் கையகப்படுத்தப்பட்டாலும் கூட மாஞ்சோலை எஸ்டேட் பகுதியை அரசு கையகப்படுத்தாமல் தொடர்ந்து எஸ்டேட் செயல்பட அனுமதி வழங்கப்பட்டது.

நீதிமன்ற உத்தரவு

அதேசமயம் வனத்துறையின் முழு கண்காணிப்பில் தான் மாஞ்சோலை இருந்தது. இதற்கிடையில் 2028 ஆம் ஆண்டுடன் குத்தகை காலம் முடிவடைய இருக்கும் சூழலில், அதற்கு முன்பாகவே எஸ்டேட் பகுதியில் அமைந்துள்ள கட்டிட இடர்பாடுகள் உட்பட எந்த இடையூறும் இல்லாமல் ஏற்கனவே இருந்ததைப் போன்று முழு காடாக மாஞ்சோலை எஸ்டேட்டை வனத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என நீதிமன்றம் பிபிடிசி நிறுவனத்திற்கு அறிவுறுத்தியிருந்தது.

எனவே, கட்டிடங்களை அகற்றுவது தொழிலாளர்கள் குடியிருப்புகளை காலி செய்வது உள்ளிட்ட பணிகள் இருப்பதால், முன்னதாகவே அதாவது 2024 ஆம் ஆண்டே பிபிடிசி நிறுவனம் மாஞ்சோலையில் தேயிலை உற்பத்தியை நிறுத்தியது. இதன் காரணமாக, இங்கு பணிபுரிந்து வந்த சுமார் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்தனர். அவர்களுக்கு நிறுவனம் கட்டாய விருப்ப ஓய்வு வழங்கி அதற்கான பணபலன்களையும் கொடுத்தது.

ஆனால், மூன்று தலைமுறைகளாக ரம்மியமான இந்த காட்டில் வசித்து வந்த தொழிலாளர்கள் மாஞ்சோலையை விட்டும் எஸ்டேட்டை விட்டுப் பிரிய மனமில்லாமல் குடியிருப்புகளை காலி செய்ய மறுத்தனர். பின்னர். பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு 400க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கீழே குடிபெயர்ந்தனர். ஆனாலும், இன்னும் சுமார் 30 பேர் குடியிருப்புகளை காலி செய்யாமல தொடர்ந்து எஸ்டேட் பகுதியிலேயே வசிக்கின்றனர்.

வனத்துறை வசம் வந்த மாஞ்சோலை

இதனால், தமிழக அரசுக்கும் வனத்துறைக்கும் பெரும் தலைவலி ஏற்பட்டது. ஒருபுறம் எஸ்டேட் தேயிலை உற்பத்தி நிறுத்தியதால் மாஞ்சோலை தேயிலை ஸ்டேட் களை இழந்தது. இது போன்ற சூழலில் தான் பிபிடிசி நிறுவனத்திடம் இருந்த 8373.57 ஏக்கர் நிலமும் ஒட்டுமொத்தமாக சமீபத்தில் வனத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது. அதாவது சிங்கம்பட்டி ஜமீன் மொத்தம் 8373.57 ஏக்கர் நிலத்தை 1929 ஆம் ஆண்டு பிபிடி சி நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்கினார். அதில், 8152.13 ஏக்கர் நிலத்தை கடந்த 2025ம் ஆண்டு மே மாதம் பிபிடிசி நிறுவனம் வனத்துறையிடம் ஒப்படைத்தது.

இருப்பினும், மீதமுள்ள 221.41 ஏக்கர் நிலத்தில் தேயிலை தொழிற்சாலை கட்டிடங்கள் தொழிலாளர்கள் குடியிருப்பு கட்டிடங்கள் போன்றவை இருந்ததால், அந்த நிலங்களை ஒப்படைக்காமல் இருந்தது. இந்நிலையில் தான், சமீபத்தில் மீதமுள்ள 221.44 ஏக்கர் நிலத்தையும் வனத்துறையிடம் பிபிடிசி நிறுவனம் ஒப்படைத்தது. இதன் மூலம், மாஞ்சோலை ஊத்து நாலுமுக்கு ஆகிய எஸ்டேட் பகுதிகள் ஒட்டுமொத்தமாக வனத்துறை வசம் வந்துள்ளது.

அகற்றப்பட்ட பெயர் பலகைகள்

இதனால், மாஞ்சோலை தேயிலை எஸ்டேட் இருந்ததற்கான அடையாளங்கள் முழுவதுமாக அழிக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே, தேயிலை எஸ்டேட் நிறுவனம் உற்பத்தியை நிறுத்தியது முதல் மாஞ்சோலை ஊத்து நாலுமுக்கு போன்ற பகுதியில் இருந்த தொழிற்சாலை கட்டிடங்கள் இடிக்கும் பணிகள் தொடங்கியது. தற்போது எஸ்டேட் நிறுவனம் தனது வசம் இருந்த நிலங்கள் அனைத்தையும் ஒப்படைத்துள்ளதால், அங்கு பிபிடிசி நிறுவனம் என்ற பெயரில் இருந்த அனைத்து பெயர் பலகைகளும் தற்போது அகற்றப்பட்டுள்ளது.

குறிப்பாக, முதல் எஸ்டேட் மாஞ்சோலையில் அமைந்துள்ளது. எனவே மாஞ்சோலையில் சோதனைச் சாவடி அமைத்து அருகில் பிபிடிசி என்ற பெயரில் பலகை வைக்கப்பட்டிருந்தது. ஆனால் வனத்துறையினர் அந்த பலகையை தற்போது அகற்றி உள்ளனர். மேலும், மாஞ்சோலை டீக்கடை முன்பிருந்த பெயர் பலகை நாலுமுக்குவில் இருந்த பெயர் பலகை என பெரும்பாலான பெயர் பலகைகள் அகற்றப்பட்டுள்ளது.

மத்திய குழுவினர் ஆய்வு

மேலும், நாலுமுக்கு ஊத்து பகுதியில் தேயிலை தொழிற்சாலை கட்டடங்களும் முழுவதுமாக பிடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டது. இதனால், மாஞ்சோலை தேயிலை எஸ்டேட் முழுவதும் ஆள் நடமாட்டம் மிக மிக குறைந்து வெறிச்சோடி காணப்படுகிறது. 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை இங்கே தொழிலாளர்கள் தேயிலை பறித்துக் கொண்டிருந்தனர். சுற்றுலாவுக்காக பொதுமக்களும் வந்து சேர்ந்தனர்.

தொடர்ந்து அடுத்த கட்டமாக மாஞ்சோலையை மேம்படுத்தப்பட்ட வனப்பகுதியாக மாற்றும் முயற்சியில் வனத்துறை இறங்கியுள்ளது. இதற்காக தனியார் தொண்டு நிறுவனத்திடம் ஆராய்ச்சி செய்யும் பணியை வனத்துறை ஒப்படைத்துள்ளது. மேலும், எஸ்டேட் இருந்த பகுதியை மீண்டும் காடாக மாற்றுவது தொடர்பாக மத்திய குழுவினர் விரைவில் ஆய்வுக்கு வர உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே, உரிய ஆய்வுக்கு பிறகு எஸ்டேட் பகுதி முழுவதும் மீண்டும் அடர்ந்த வனப் பகுதியாக மாற்றப்படுவதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version