முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைதுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக எம்.பி. கனிமொழி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

உதயநிதி ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில், “ முன்னாள் அமைச்சர் அண்ணன் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களை காவல்துறை கைது செய்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன்.

தமிழ்நாடெங்கும் சீர்கெட்டு போயிருக்கும் சட்டம் ஒழுங்கை மீட்டெடுக்கக் காட்டாத வேகத்தை, எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினரை கைது செய்வதில் காட்டியிருக்கிறது சோஃபா மாடல் அரசு. அவதூறு பேசி – பொய் பழிகளை அள்ளி வீசுவது மட்டும் தான் அரசியல் என்று செயல்படும் ஆளுங்கட்சியின் இந்த அராஜகப் போக்கை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

பொய் வழக்காலும் – கைது நடவடிக்கைகளாலும் கழகத்தை முடக்கலாம் என்று நினைக்கும் இந்த ரீல்ஸ் அரசின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது” எனக் கூறியுள்ளார்.

“அடக்குமுறைகளுக்கு  திமுக அடிபணியாது”

கனிமொழி விடுத்துள்ள அறிக்கையில், “ முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களை தவெக அரசின் காவல்துறை கைது செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர், தனது தொகுதியில் ஆய்வுப் பணியில் இருக்கையில் அராஜகமான முறையில் அவரை கைது செய்திருக்கிறது, இந்த தவெக அரசு. இதுபோன்ற அடக்குமுறைகளுக்கு எல்லாம் ஒருபோதும் திமுக அடிபணியாது” எனக் கூறியுள்ளார்.

 

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version