அதிமுகவின் முக்கியப் பொறுப்புகளில் இருந்த முன்னாள் அமைச்சர் முனைவர் வைகைச் செல்வன், அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.

சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு அதிமுகவில் உட்கட்சி பூசல் பூதகரமாக வெடித்து அடுத்தடுத்து உறுப்பினர்கள் கட்சிகளில் இருந்து விலகி தவெகவில் ஐக்கியமாகி வருகின்றனர். அதிமுக தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாகவே, மரகதம் குமரவேல் உள்ளிட்ட முக்கிய எம்.எல்.ஏ.க்கள் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தனர். இதேபோல் நேற்றும் முன்னாள் அமைச்சர்கள் டாக்டர் விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோரும் தங்களது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.

இதுதொடர்பான கடிதத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பியுள்ளார். அதில், ஒரு உண்மையான தலைவர் என்பவர், தான் அழிந்தாலும் தனது கொள்கைகளும் இயக்கமும் வெற்றி பெற வேண்டும் என்று எண்ணுபவர் அல்ல; மாறாக, தொண்டர்களும் இயக்கமும் நன்றாக இருக்க வேண்டும் என்று சிந்திப்பவரே சிறந்த தலைவர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

திமுகவுடன் இணைந்து ஆட்சியை அமைக்கத் திட்டமிட்டதன் மூலம், அக்கட்சியை எதிர்க்கும் தன் அடிப்படைக் கொள்கை நிலையிலிருந்து விலகி அதிமுக சமரசப் போக்கைக் கையாண்டதாகவும், இது கட்சியின் அடையாளத்தையே இழக்கச் செய்துவிட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

சரியான நேரத்தில் தவறான முடிவுகளை எடுத்ததாலேயே, அதிமுக தனது வெற்றிப் பாதையிலிருந்து விலகிச் சென்றதாக அவர் விமர்சித்துள்ளார். தேர்தல் களத்தில் தான் தனித்து விடப்பட்ட போதிலும் கட்சியின் வெற்றிக்காகத் தீவிரமாகப் பரப்புரை செய்ததாகவும், ஆனால் கட்சித் தலைமையின் புறக்கணிப்பு என்பது மரணத்தை விடக் கொடியதாகத் தனக்கு உணர்த்தியதாகவும் வைகைச் செல்வன் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

அரசுத் தலைமை கொறடா, கழக இலக்கிய அணிச் செயலாளர் மற்றும் செய்தித் தொடர்பு முதன்மைச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்த வைகைச் செல்வனின் இந்த திடீர் விலகல், அதிமுக அரசியல் வட்டாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version