உதயநிதி ஸ்டாலினின் பேச்சு பெண்களின் கண்ணியத்தையும், சமூகத்தில் அவர்களுக்கு வழங்க வேண்டிய மரியாதையையும் கேள்விக்குள்ளாக்கும் வகையிலான அணுகுமுறை என கவுண்டம்பாளையம் தவெக எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ் குற்றம்சாட்டியுள்ளார்.

எக்ஸ்தளத்தில் கனிமொழி இட்டுள்ள பதிவு வருமாறு….

ஒரு பொது வாழ்க்கையில் இருக்கும் உயர்ந்த பொறுப்பில் உள்ளவர், அரசியல் கருத்து வேறுபாடுகளை நாகரிகமான முறையில் வெளிப்படுத்த வேண்டும்.

குறிப்பாக, பெண்களைப் பற்றியோ அல்லது பெண்களின் கண்ணியத்தை பாதிக்கும் வகையிலோ பேசுவது எந்த நிலையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.

பொது வாழ்க்கையில் இருக்கும் ஒருவர் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் பொறுப்பு உண்டு. அரசியல் என்பது மக்கள் பிரச்சினைகளைப் பற்றி பேசுவதற்கான களம்; பெண்களின் கண்ணியத்தை இழிவுபடுத்துவதற்கான இடம் அல்ல. உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சை ஒரு பெண்ணாக நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இது வெறும் அரசியல் கருத்து வேறுபாடு அல்ல; பெண்களின் கண்ணியத்தையும், சமூகத்தில் அவர்களுக்கு வழங்க வேண்டிய மரியாதையையும் கேள்விக்குள்ளாக்கும் வகையிலான அணுகுமுறை.

அரசியல் அதிகாரம் இருப்பதால் வாய்க்கு வந்ததை எல்லாம் பேசிவிட்டு தப்பித்துக்கொள்ளலாம் என்ற காலம் முடிந்துவிட்டது. பெண்களை இழிவுபடுத்தும் எந்தவொரு பேச்சாக இருந்தாலும், அது யாரிடமிருந்து வந்தாலும், அதை எதிர்த்து குரல் கொடுப்பது ஒவ்வொரு பெண்ணின் உரிமையும் பொறுப்பும் ஆகும்.

இத்தகைய பேச்சுகள் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு, சட்டத்திற்கும் ஜனநாயக நெறிமுறைகளுக்கும் உட்பட்டு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பெண்களின் கண்ணியத்தை யாரும் அரசியல் ஆயுதமாக பயன்படுத்த அனுமதிக்க முடியாது. ஒரு பெண்ணின் மரியாதையை அவமதிக்கும் வார்த்தைகள் எங்கிருந்து வந்தாலும், அதற்கு எதிராக பெண்களின் குரல் ஓங்கி ஒலிக்கும்!

பெண்களின் கண்ணியம் காக்கப்பட வேண்டும். பெண்களை அவமதிக்கும் பேச்சுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். இதுதான் நாகரிகமான தமிழ்நாட்டின் குரல்!

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version