கர்நாடகத்தின் துணை முதல்வராக ஜி. பரமேஸ்வரா இன்று பதவியேற்பார் என்று சித்தராமையா அறிவித்துள்ளார்.
கர்நாடக அரசியலில் கடந்த சில நாட்களாக பரபரப்பை ஏற்படுத்தியிருந்த துணை முதல்வர் பதவி தொடர்பான விவாதங்களுக்கு முடிவுகட்டும் வகையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ஜி. பரமேஸ்வரா மாநிலத்தின் புதிய துணை முதல்வராக பதவியேற்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த தகவலை முன்னாள் முதல்வர் சித்தராமையா உறுதிப்படுத்தியுள்ளார்.
2023-ஆம் ஆண்டு நடைபெற்ற கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தெளிவான பெரும்பான்மையை பெற்று ஆட்சியை கைப்பற்றியது. அப்போது கட்சியின் உயர்மட்டத் தலைமையினரிடையே ஏற்பட்ட உடன்பாட்டின்படி, முதற்கட்டமாக சித்தராமையா முதல்வராக பொறுப்பேற்கவும், பின்னர் டி.கே. சிவகுமார் தலைமையிலான ஆட்சி அமையவும் திட்டமிடப்பட்டதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்பட்டு வந்தது. அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், மூன்று ஆண்டுகள் முதல்வராக பணியாற்றிய சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சிக் கூட்டத்தில் டி.கே. சிவகுமார் ஒருமனதாக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் அவர் கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்து புதிய அரசு அமைக்க உரிமை கோரினார். அதையடுத்து ஆளுநர் அவருக்கு ஆட்சியமைக்க அதிகாரப்பூர்வ அழைப்பு விடுத்தார்.
பெங்களூருவில் உள்ள மக்கள் மாளிகையில் இன்று மாலை நடைபெறவுள்ள பதவியேற்பு விழாவில் டி.கே. சிவகுமார் கர்நாடகத்தின் புதிய முதல்வராக பதவியேற்கிறார். அவருடன் அமைச்சரவை உறுப்பினர்கள் மற்றும் துணை முதல்வரும் பதவிப் பிரமாணம் செய்து கொள்ள உள்ளனர்.
துணை முதல்வர் பதவிக்கு பல மூத்த தலைவர்களின் பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், அந்த ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஜி. பரமேஸ்வராவின் பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், முதல்வராக பொறுப்பேற்கவுள்ள டி.கே. சிவகுமாரும், துணை முதல்வராக பதவியேற்கவுள்ள ஜி. பரமேஸ்வராவும் தன்னை சந்தித்து வாழ்த்து பெற்றதாக சித்தராமையா குறிப்பிட்டுள்ளார்.
கர்நாடக காங்கிரஸின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஜி. பரமேஸ்வரா, நீண்டகால அரசியல் அனுபவம் கொண்டவர். முன்னதாக சித்தராமையா தலைமையிலான அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக பணியாற்றிய அவர், நிர்வாக திறன் மற்றும் கட்சிக்கான பங்களிப்பின் அடிப்படையில் இந்த உயரிய பொறுப்புக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் மதிப்பிடுகின்றனர்.
புதிய முதல்வர் டி.கே. சிவகுமார் மற்றும் துணை முதல்வர் ஜி. பரமேஸ்வரா தலைமையில் கர்நாடக அரசு புதிய அரசியல் கட்டத்தை நோக்கி நகரும் நிலையில், மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் நிர்வாகத்தில் புதிய மாற்றங்கள் ஏற்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
