மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு கோடநாடு எஸ்டேட்டில் மணி மண்டபம் கட்ட திமுக அரசு அனுமதி மறுத்துள்ளதற்கு சசிகலா கண்டனம் தெரிவித்துள்ளார். 2026-க்கு பிறகு ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றும் அப்போது மணிமண்டபம் கட்டப்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கோடநாடு எஸ்டேட்டிற்கு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியும், கோடநாடு எஸ்டேட்டின் பங்குதாரருமான சசிகலா வருகை புரிந்துள்ளார்.
அங்கு அவர் மூன்று நாட்கள் தங்கி ஓய்வெடுக்க உள்ளார். கோடநாட்டுக்கு வருகை தந்த அவருக்கு எஸ்டேட் தொழிலாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் சிறப்பான வரவேற்பு தந்தனர். ஜெயலலிதா மறைந்த பிறகு சசிகலா கோடநாட்டிற்கு வருவது இது இரண்டாவது முறையாகும்.
கோடநாட்டிற்கு வந்த சசிகலா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கோடநாட்டில் ஜெயலலிதாவிற்கு மணி மண்டபம் கட்ட திமுக அரசாங்கம் அனுமதி மறுத்து விட்டதாக குற்றஞ்சாட்டினார். எங்கள் சொந்த நிலத்தில் மணிமண்டபம் கட்ட எதிர்ப்பு தெரிவிப்பது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். 2026 ல் நிச்சயமாக தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றும் அம்மாவின் ஆட்சி அமைந்ததும் கோடநாட்டில் மணி மண்டபம் அமைக்கப்பட்டு எல்லா மக்களும் பார்க்கும்படி செய்யப்படும் என்றார்.
மணிமண்டபம் கட்ட திமுக அனுமதி மறுத்தது தொடர்பாக நீதிமன்றத்தை நாடுவது குறித்து வழக்கறிஞர்களிடம் கலந்தாலோசித்து முடிவு செய்யப்படும் என்றும் சசிகலா கூறியுள்ளார். திமுகவினர் மக்களிடம் அதிக வரியை வசூலிப்பதில் முனைப்பாக உள்ளனர் என்றும், மக்களுக்கு ஒன்றுமே கிடைக்கவில்லை என்றும் அவர் அதிருப்தி தெரிவித்தார். இந்த நிலை மாறவேண்டும் என்றால் அம்மா ஆட்சியை நான் கொண்டு வருவேன் என செய்தியாளர்களிடம் சசிகலா தெரிவித்துள்ளார்.