மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு வினாத்தாள் கசிவு சர்ச்சையைத் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டதால், ஏற்கெனவே செலுத்திய தேர்வுக் கட்டணத்தைத் திரும்பப் பெற மாணவர்களுக்கு இன்று (ஜூலை 7) இரவு 11.50 மணி வரை கடைசி வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. தேசிய தேர்வு முகமை (என்டிஏ) இதை வலியுறுத்தியுள்ளது.

கடந்த மே 3-ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு புகார் எழுந்தது. இதையடுத்து வட மாநிலங்களில் பலர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் மருத்துவக் கனவு நோக்கி இரு ஆண்டுகளுக்கும் மேலாக தயாராகி வந்த லட்சக்கணக்கான மாணவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தேர்வு எளிதாக இருந்ததாக மாணவர்கள் கூறிய நிலையில், திடீர் ரத்து முடிவால் அவர்களின் உழைப்பு வீணாகியது.

இதையடுத்து, மறுதேர்வு ஜூன் 21-ம் தேதி நடத்தப்பட்டது. அதே நேரத்தில், மே 3-ம் தேதி தேர்வில் பங்கேற்ற விண்ணப்பதாரர்களுக்கு செலுத்திய கட்டணத்தை முழுமையாகத் திரும்ப வழங்க என்டிஏ முடிவு செய்தது. இதற்காக ஜூலை 7-ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் வங்கிக் கணக்கு விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. என்டிஏவின் தகவலின்படி, இதுவரை 8,29,510 விண்ணப்பதாரர்கள் மட்டுமே தங்கள் வங்கிக் கணக்கு விவரங்களை சரிபார்த்து சமர்ப்பித்துள்ளனர்.

மீதமுள்ள மாணவர்கள் உடனடியாக neet.nta.nic.in இணையதளத்திற்கு சென்று தங்கள் விண்ணப்ப எண், பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் பிற அத்தியாவசிய விவரங்களைப் பயன்படுத்தி வங்கிக் கணக்கு விவரங்களை (IFSC கோடு, கணக்கு எண் உள்ளிட்டவை) சமர்ப்பிக்க வேண்டும். ஏற்கெனவே சரியான விவரங்களை சமர்ப்பித்த மாணவர்களுக்கு கட்டணத் தொகை திரும்ப வழங்கும் பணி தொடங்கியுள்ளது.

வங்கி கணக்கு விவரங்கள் தவறாக இருந்தால் அல்லது சமர்ப்பிக்கப்படவில்லை என்றால், பணம் திரும்ப வராது என்பதால் மாணவர்கள் கவனமுடன் செயல்படுமாறு என்டிஏ அறிவுறுத்தியுள்ளது. இந்த ரத்து முடிவு மற்றும் ரீ-டெஸ்ட் நடைமுறை மருத்துவக் கல்வியில் நம்பிக்கைக்குரிய தேர்வு முறையை பலப்படுத்த வேண்டியதன் அவசியத்தை மீண்டும் நினைவூட்டியுள்ளது.

பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்ட இந்த சம்பவம், தேர்வு நடத்தும் அமைப்புகளின் பாதுகாப்பு அம்சங்களை வலுப்படுத்த வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இன்று இரவுக்குள் செயல்முறையை முடிக்குமாறு வலியுறுத்தப்படுகின்றனர். மேலும் விவரங்களுக்கு என்டிஏ இணையதளத்தைப் பார்வையிடலாம்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version