தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திருச்சி கிழக்கு நீங்கலாக 107 இடங்களில் வென்ற தவெக, தனி பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனால், ஆட்சி அமைக்க தேவையான 118 இடங்கள் அந்தக் கட்சிக்கு இல்லை. இதனால், திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவை கோரியது தவெக. தவெகவின் அந்த ஆதரவு கோரிக்கையை உடனடியாக ஏற்ற காங்கிரஸ் திமுக கூட்டணியில் இருந்து விலகி, தவெகவில் இணைந்து ஆட்சி அமைக்க ஆதரவு அளித்தது.
மேலும், அமைச்சரவையில் இரண்டு அமைச்சர்களையும், தற்போது மாநிலங்களவையில் ஒரு எம்.பி.யையும் பெற்றுள்ளது. இதேபோல், விசிகவும், ஐ.யு.எம்.எல். ஆகியை முதலில் வெளியில் இருந்து ஆதரவு எனும் நிலைபாட்டை எடுத்து பின்னர் இரண்டு கட்சிகளும் தலா ஒரு அமைச்சர்களை தவெக அரசில் பெற்றுள்ளன. சிபிஎம் மற்றும் சிபிஐ ஆகியை நிபந்தனையற்ற ஆதரவை தவெக அரசுக்கு வழங்கிவருகிறது.
அதனைத் தொடர்ந்து நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், அதிமுகவின் எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் தலைமையிலான 25 எம்.எல்.ஏ.க்களும், அமமுக எம்.எல்.ஏ. காமராஜும் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதன் பிறகு அதிமுக எம்.எல்.ஏ.க்களாக இருந்த மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா மற்றும் இசக்கி சுப்பையா ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.
அதேசமயம், அதிருப்தி அணியில் இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களுமான சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்ட சிலர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் ஐக்கியமாகினர்.
இந்தநிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் உட்கட்சிக் கட்டமைப்பை வலுப்படுத்தும் பணிகளில் அக்கட்சியின் தலைவரும் தமிழக முதலமைச்சருமான விஜய் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக, இன்று மாலை 3 மணி அளவில் சென்னை பனையூரில் உள்ள த.வெ.க. தலைமை அலுவலகத்தில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்தக் கூட்டத்தில், சமீபத்தில் அதிமுக உள்ளிட்ட பிற கட்சிகளிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பலரும் பங்கேற்க உள்ளனர். இவர்களுக்குக் கட்சியில் உரிய பொறுப்புகளை வழங்குவது மற்றும் எதிர்கால அரசியல் வியூகங்கள் குறித்து முதலமைச்சர் விஜய் விரிவான ஆலோசனை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..
மேலும், நிர்வாக வசதிக்காகத் தமிழக வெற்றிக் கழகம் கூடுதல் மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு, புதிதாக அறிவிக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கான செயலாளர்களுக்கு, முதலமைச்சர் விஜய் சான்றிதழ்களை வழங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
