அயோத்தி தாச பண்டிதருக்கு திருவுருவச் சிலையும், மணிமண்டபமும் திமுகவின் திராவிட மாடல் ஆட்சியில்தான் அமைக்கப்பட்டது முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இன்று அயோத்தி தாச பண்டிதரின் 181வது பிறந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார்.
அயோத்தி தாச பண்டிதரின் சிலைக்கு மரியாதை செய்யும் புகைப்படத்தை பதிவேற்றியுள்ள அவர், சாதியெனும் இருள் அகற்றிடத் தோன்றிய திராவிடப்_பேரொளி அயோத்திதாசரின் புகழ் ஓங்குக எனப் பதிவிட்டுள்ளார்.
மயங்கிக் கிடந்த நம் இனம் விழித்தெழ, புரட்சிகரச் சிந்தனைகளை விதைத்த திராவிட இயக்கத்தின் முன்னோடி பண்டிதர் அயோத்திதாசர் எனவும்,
அவருக்குத் திருவுருவச் சிலையும் மணிமண்டபமும் அமைத்தது, அவரது பெயரில் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டம் உருவாக்கியது உள்ளிட்டவை திராவிட மாடல் அரசுக்கு கிடைத்திட்ட பெரும் பெருமை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சாதிபேதமற்ற சமுதாயத்தைக் கட்டமைத்திட, ‘தமிழன்’, ‘திராவிடன்’ ஆகிய சொற்களை அரசியல்களத்தில் ஆயுதமாகப் பயன்படுத்திய அயோத்திதாசரின் சிந்தனைகள் நீடு வாழ வேண்டும் எனக் கூறியுள்ள முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திராவிடச் சிந்தனை நோக்கி இளைஞர்களை ஈர்த்த அவரது வழியில் பயணிப்போம்! தமிழ்ச் சமூகம் மேன்மையுற தொடர்ந்து பாடுபடுவோம் என அழைப்பு விடுத்துள்ளார்.
