மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் சமோசா சாப்பிட ஆசைப்பட்ட லோகோ பைலட் ரயிலை நடுவழியில் நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் பகுதியில் சென்று கொண்டிருந்த இந்தூர் – மஹே, டெமு ரயிலின் லோகோ பைலட்டுக்கு திடீர் என சமோசா சாப்பிடும் ஆசை உந்தி தள்ளியுள்ளது. இதனால், ரயில் செல்லும் வழியில் தண்டவாளம் அருகே சமோசா கடை இருப்பதைப் பார்த்த அவர், உடனடியாக அங்கேயே நடுவழியில் ரயிலை நிறுத்திவிட்டு இறங்கிச் சென்று அந்த சமோசா கடையில் சமோசா வாங்கிவிட்டு, பின்னர் சாவகாசமாக நடந்து சென்று ரயிலில் ஏறி அதனை இயக்கிச் சென்றுள்ளா.
நடுவழியில் ரயிலை நிறுத்தி சமோசா வாங்கிச் சென்ற லோகோ பைலட்டின் சமோசா ஆசை குறித்து அந்தப் பகுதியில் இருந்த நபர் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட இப்போது அது வேகமாகப் பரவி வருகிறது.
ஒரு ரயில் நிலையத்தில் இருந்து ரயில் புறப்பட்டால் அடுத்த நிறுத்தத்தில் மட்டும்தான் நிறுத்தவேண்டும். இடையில் ஏதேனும் இயற்கை சீற்ற பாதிப்போ அல்லது, ரயிலில் எதிர்பாராத கோளாறோ ஏற்பட்டால், உடனடியாக அது குறித்து அருகில் உள்ள ரயில் நிலையத்துக்கு தகவல் அளித்தபின்னரே ரயிலை நிறுத்த வேண்டும்.
ஆனால், இந்த லோகோ பைலட்டோ, எந்தவித தகவலும் கொடுக்காமல், சமோசாவுக்காக ரயிலை நிறுத்தியது தற்போது இந்த வீடியோவினால் பேசு பொருளாகியுள்ளது.
இது தொடர்பாக ரத்லாம் ரயில்வே கோட்ட மக்கள் தொடர்பு அதிகாரி (PRO) முகேஷ் குமாரை செய்தியாளர்கள் தொடர்பு கொண்டபோது,
“இந்த தகவல் எங்களுக்கு சமூக வலைதளங்கள் மூலமாக கிடைத்தது. சமூக வலைதளங்களில் பரவியுள்ள இந்த வீடியோவை முழுமையாக உறுதிப்படுத்த முடியவில்லை.
இருப்பினும், இந்த வீடியோ எங்கள் ரயில்வே கோட்டத்தைச் சேர்ந்ததாகத் தெரிகிறது. எனவே, வீடியோ எடுக்கப்பட்ட இடம், சம்பந்தப்பட்ட ரயில் ஓட்டுநர் மற்றும் ரயிலை அடையாளம் காணும் பணியில் விசாரணை நடைபெற்று வருகிறது. வீடியோவைப் பார்க்கும்போது அது சரக்கு ரயில் போல் தெரிகிறது.
விசாரணை முடிவின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
ஜூலை 7ஆம் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கிச் சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலின் லோகோ பைலட்டுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.இதனால் பயணிகளின் பாதுகாப்பைக் கருதி அவர் ஆவடி ரயில் நிலையத்தில் ரயிலை உடனடியாக நிறுத்திய நிலையில், ஊழியர்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மாற்று ஓட்டுநர் வரும் வரை சுமார் 45 நிமிடங்கள் ரயில் அங்கேயே நின்று அதன்பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.
