தர்மபுரியில் காதலை ஏற்க மறுத்த இளம்பெண்ணை பேருந்து நிலையத்தில் இளைஞர் ஒருவர் கத்தியால் கழுத்தை அறுத்து, வயிற்றில் குத்திய சம்பவம் தருமபுரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேங்காய்மரத்துப்பட்டியைச் சேர்ந்தவர் ஷீலா. தனியார் நகைக்கடையில் வேலைபார்த்து வந்த ஷீலாவும், அதே பகுதியை சேர்ந்த சின்னசாமியும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஷீலாவின் வீட்டிற்கு இந்த விவகாரம் தெரியவர, அவரது பெற்றோர் இந்த காதலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் கடந்த 6 மாதத்திற்கு முன்பு ஷீலா, சின்னசாமியுடனான காதலை முறித்துக் கொண்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சின்னசாமி, பணி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்த ஷீலாவை வழி மறித்து கழுத்தில் ஒரு முறையும், வயிற்றில் இருமுறையும் சரமாரியாக குத்தியுள்ளார். ஷீலாவின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் தப்பியோட முயன்ற சின்னசாமியை கையும் களவுமாக பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.
தகவலறிந்து வந்த போலீசார், ஷீலாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அத்தோடு சின்னசாமியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
