திருவள்ளூர் அருகே உள்ள காக்களூர் ஏரியில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதப்பதால், அப்பகுதி முழுவதும் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

சுமார் 15 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரியை மேம்படுத்த, ‘நமக்கு நாமே’ மற்றும் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் கடந்த ஆண்டு ரூ.2.51 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, பூங்கா மற்றும் நடைபாதைகள் அமைக்கப்பட்டு, நான்கு மாதங்களுக்கு முன்புதான் மக்களின் பயன்பாட்டிற்காகத் திறக்கப்பட்டது. ஆனால், தற்போது ஏரி பராமரிப்பின்றி மாசுபட்டு வருவது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

ஏரியைச் சுற்றியுள்ள இறைச்சிக் கடைகளின் கழிவுகள் மற்றும் அருகிலுள்ள வீட்டு வசதி வாரியக் குடியிருப்புகளில் இருந்து சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நேரடியாக ஏரிக்குள் விடப்படுவதே மீன்கள் உயிரிழப்பிற்கு முக்கியக் காரணம் எனக் கூறப்படுகிறது. சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு மீன்கள் செத்து மிதப்பதன் காரணமாக, அப்பகுதியில் வசிக்கும் குடியிருப்போர், நடைப்பயிற்சிக்கு வருபவர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

எனவே, ஏரியைச் சுத்தப்படுத்தி செத்து மிதக்கும் மீன்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும், கழிவுநீர் மற்றும் இறைச்சிக் கழிவுகள் ஏரியில் கலப்பதைத் தடுக்க மாவட்ட ஆட்சியர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version