மு.க.ஸ்டாலின் மீண்டும் தமிழ்நாட்டின் முதலமைச்சராவார் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி தெரிவித்துள்ளார்.
தமிழக முன்னாள் முதல்வரும் போடி சட்டமன்ற திமுக வேட்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் தனது சொந்த ஊரான பெரியகுளத்தில் உள்ள தென்கரையில், தனியார் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் தனது வாக்கினைப் பதிவு செய்தார்.
அதனைத் தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வத்தின் மூத்த மகனும் முன்னாள் தேனி மக்களவை உறுப்பினருமான ஓ.பி. ரவீந்திரநாத் இளைய மகன் ஜெயபிரதீப், ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் சண்முகசுந்தரம் மற்றும் அவரது குடும்பத்தார்கள் தங்களது ஜனநாயக கடமையினை நிறைவேற்றினார்.
செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி மகத்தான வெற்றியை பெறும் நிலை இன்று உருவாகியுள்ளது என்றார்.
கடந்த 5 ஆண்டுகாலமாக நாட்டு மக்களுக்கு ஒரு சிறப்பான ஆட்சியை நாட்டு மக்களுக்கு முதலமைச்சர் தந்ததன் அடிப்படையில் அனைத்து மக்களும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி மீண்டும் வெற்றி பெறும் என்பதை உறுதி செய்திருக்கிறார்கள்.
தமிழகத்தின் முதலமைச்சராக மீண்டும் 2-வது முறையாக மு.க.ஸ்டாலின் வருவார் என்னும் நிலை உருவாகியுள்ளது.
வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டு தவெக எத்தனை சதவிகித வாக்குகள் பெறுகிறார் என்பதைப் பொறுத்து விஜய்யின் எதிர்காலம் உள்ளது.
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 200க்கும் மேற்பட்ட இடங்களில் உறுதியாக வெற்றிபெறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
