விராலிமலை சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பிரிட்ஜ் வாங்க கூப்பன்கள் வழங்கி தேர்தல் முறைகேட்டில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட தேர்தல் வழக்கில், முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்  பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், 1,05,773 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவர், தவெக வேட்பாளர் முருகேசனை 62,073 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

இந்த வெற்றியை எதிர்த்து, திமுக வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்த கே.கே.செல்லப்பாண்டியன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், தேர்தல் பிரச்சாரத்தின் போது சி.விஜயபாஸ்கர் வாக்காளர்களுக்கு ரூ.10,000 மற்றும் ரூ.2,000 மதிப்பிலான கூப்பன்கள் வழங்கியதுடன், பிரிட்ஜ் வாங்குவதற்கான கூப்பன்களையும் வழங்கி தேர்தல் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. எனவே, அவரது வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.செந்தில்குமார், மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டார். மனுதாரர் முன்வைத்துள்ள தேர்தல் முறைகேடு குற்றச்சாட்டுகள் குறித்து பதிவு செய்த நீதிபதி, வழக்கில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் இந்திய தேர்தல் ஆணையம் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்தார்.

மேலும், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை மூன்று வாரங்களுக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version