அரசு வேலை வாங்கித் தருவதாக லஞ்சம் கேட்பவர்களிடம் ஏமாந்துவிடாதீர்கள் என சமூக ஆர்வலர் சங்கரபாண்டி என்பவர் மதுரை ஆட்சியரகத்தில் அல்வா கொடுத்து நூதன விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொண்டார்.
மதுரை செல்லூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சங்கரபாண்டியை ஞாயிற்றுக்கிழமை தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் மின்வாரியத்தில் 11 காலிப்பணியிடத்திற்கான அரசு வேலை உள்ளதாகவும்,
அதில் AE , AD போஸ்டிங்கிற்கு 10 லட்சம் ரூபாய், ரீடிங் மற்றும் அக்கவுண்ட்ஸ் பிரிவுக்கு 8 லட்சம் ரூபாய், வருவாய்த்துறையில் உதவியாளருக்கு 8 லட்சம் ரூபாய் கொடுத்தால் வேலை வாங்கித் தருவதாகவும்,
அதற்கு 20 ஆயிரம் ரூபாய் மட்டும் அட்வான்ஸ் கொடுத்தாலே போதும், பரீட்சை எழுதாமலேயே எழுதியது போல் செய்து, அரசு வேலை பெற்றுத் தருவதாகக் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபடும் அந்த மர்ம நபர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடவடிக்கை எடுக்க கோரியும்,
இதுபோன்ற மோசடி நபர்களிடம் பொதுமக்கள் ஏமாற்றமடைவதை தடுக்கும் வகையில் மதுரை மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் சமூக ஆர்வலர் சங்கரபாண்டியன் கையில் அல்வாவுடன் வந்து நூதன முறையில் கோரிக்கை மனு அளித்தார்.
இதனை தொடர்ந்து அங்கிருந்த பொதுமக்களை சந்தித்து CM விஜய் சார் லஞ்சம் குடுக்கக் கூடாது என கூறியுள்ளார். காசு கொடுத்தா அரசு வேலைனு அல்வா கொடுப்பாங்க நம்பி ஏமாந்திறாதீங்க என பொதுமக்களுக்கு அல்வா வழங்கி நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
