தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூரை நியமித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக கு.செல்வப்பெருந்தகை பதவி வகித்த நிலையில், தற்போது அவருக்கு பதிலாக விருதுநகர் மக்களவைத் தொகுதியின் காங்கிரஸ் உறுப்பினரும், கொறடாவுமான மாணிக்கம் தாகூர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பு உடனடியாக அமலுக்கு வருவதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தலின் போது, கூட்டணி முடிவு குறித்தும், வேட்பாளர் தேர்வு, தொகுதிகள் பெறுவது உள்ளிட்ட விஷயங்கள் தொடர்பாகவும், கூட்டணிக் கட்சியான திமுக குறித்தும் தமிழக காங்கிரஸ் தலைமைக்கு எதிராக மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உள்ளிட்டோர் கருத்து தெரிவித்தனர். இந்தநிலையில், தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸ் தலைமை சந்தித்து தனது ராஜினாமா முடிவு செல்வப்பெருந்தகை அறிவித்தார். இதனிடையே சட்டமன்றத் தேர்தலில் 28 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 5 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றது. சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய காங்கிரஸ் தவெக ஆட்சி அமைக்க ஆதரவு அளித்தது. பின்னர், அமைச்சரவையில் இடம்பெற்றது.
இந்தநிலையில் தேர்தலுக்குப் பிறகு மாநிலத் தலைமை மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று (ஜூன் 27) தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.

