விஜய்க்கு எதிராக எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்குவது என திமுக முடிவெடுத்ததாகவும் அதைக்கேட்டு உதயநிதி துள்ளிக் குதித்ததாகவும் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் பகீர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் மே 23-ஆம் தேதி நடைபெற்ற திமுக இளைஞரணிஆலோசனைக் கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், இந்திய அளவில் பாஜகவின் தொடர் வெற்றிக்கு காரணம் மோடியோ, அமித்ஷாவோ அல்ல காங்கிரஸ் தான் காரணம் எனக் கூறியிருந்தார். 20 ஆண்டுகளாக முதுகில் சுமந்த குறைந்தபட்ச நன்றி கூட இல்லாமல், பதவிக்காக சொல்லாமல் கொள்ளாமல் காங்கிரஸ் ஓடிப்போனதாகவும், இனி எந்தக் காலத்திலும் காங்கிரசை நம்பப் போவதில்லை எனவும் சாடினார். காங்கிரசுக்கு நாம் பாடம் கற்பிக்கிறோமோ இல்லையோ, மக்கள் பாடம் கற்றுக் கொடுப்பார்கள் எனவும் பேசியிருந்தார்.
இதற்கு காங்கிரஸ் தரப்பிலும் எதிர்வினையாற்றி வருகிறார்கள். நாகரிகமாக பேச வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் விருதுநகர் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், திமுகவும் அதிமுகவும் சேர்ந்து கூட்டணி அமைக்க முற்பட்டதால்தான், காங்கிரஸ் உடனடியாகச் சென்று தவெகவுக்கு ஆதரவளித்ததாகக் கூறியுள்ளார்.
சிவகாசியில் செய்தியாளர்களிடம் பேசிய மாணிக்கம் தாகூர் எம்.பி, மே 4-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருந்தபோது முடிவுகள் தவெகவுக்கு சாதகமாக வந்து கொண்டிருந்ததால், திமுகவும், அதிமுகவும் சேர்ந்து ஆட்சி அமைக்க திட்டமிட்டதாகவும்,
பாஜக-வின் முக்கிய தலைவர் ஒருவர் திமுக மற்றும் அதிமுகவுக்கு கனெக்டிங் கால் செய்தார் எனவும் தெரிவித்துள்ளார். திமுக, அதிமுக கூட்டணி பேச்சு நடத்தியதை தற்போது சி.வி.சண்முகமும் தனது பேட்டியில் தெரிவித்துள்ளதைச் சுட்டிக்காட்டினார்.
அந்தப் பேச்சுவார்த்தையில் திமுக ஆதரவோடு, எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்குவதற்கு உதயநிதி ஸ்டாலின் சம்மதம் தெரிவித்ததாகவும் இபிஎஸ் முதலமைச்சர் எனக் கூறியதும் உதயநிதி ஸ்டாலின் துள்ளிக் குதித்ததாகவும் தெரிவித்தார்.
திமுக, அதிமுகவின் இந்த திடீர் கூட்டணி விவகாரத்தை தெரிந்து கொண்டுதான், தமிழக வெற்றிக் அக்ழகத்துக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்ததாகவும்,
திமுக- அதிமுக-வின் இந்தத் திட்டத்தை உடைத்தது காங்கிரஸ் என்பதால்தான், தங்கள் மீது திமுக காழ்ப்புணர்ச்சி கொண்டுள்ளதாகவும் கூறினார்.
பா.ஜ.க.வுக்கு ஒரு சாதகமாக முடிவு எடுப்பதற்காக தமிழ்நாடுஆளுநரின் மறைமுக ஒத்துழைப்பு இருந்ததாகவும், இதையெல்லாம் வெளியில் சொன்னால் அது தப்பாகி விடும் என்பதால் அமைதியாக இருந்ததாகவும் தெரிவித்தார்.
கொள்கைகளை குப்பையில் போட்டுவிட்டு அ.தி.மு.க. ஆட்சி அமைக்க ஆதரவு தர துடித்த உதயநிதி தி.மு.க. இளைஞரணி கூட்டத்தில் அளந்து பேசியிருக்க வேண்டும் எனக் கூறிய மாணிக்கம் தாகூர் எம்.பி, எதிர்காலத்தில் பாஜகவுடன் திமுகவும் அதிமுகவும் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்கும் எனவும் தெரிவித்தார்.
