ஆங்கிலேயர்களின் இந்தியக் காலனியாதிக்கத்தை எதிர்த்து, 1801-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 16-ஆம் நாள் மருது சகோதரர்களால் ஜம்புத் தீவு பிரகடனம் வெளியிடப்பட்டது.
அதன் 225-வது ஆண்டான இன்று பாரதம் சுயசார்புடன் என்றும் நிற்க எல்லோரும் ஜம்புத்தீவு பிரகடனத்தை நினைவிற் கொள்ள வேண்டும் என தமிழ்நாடு அளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் வலியுறுத்தியுள்ளார்.
ஆளுநர் அர்லேகர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது;-
முதல் சுதந்திரப் போருக்கு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே, ஆற்காடு நவாப்களுக்கு அடியாள்களாக வந்து அதிகாரத்தைப் பறிக்க முயன்ற ஆங்கிலேய ஆக்கிரமிப்பாளர்களை அகற்றி விரட்ட ஆயுதப்போர் புரிந்து, மண்ணும் மானமும் பெரிதென்று மாபெரும் போர் செய்த மாவீரர்கள் மருதுபாண்டியர்கள்!
பாரதத்தின் கீழ் பகுதி நாவல் பழத்தை ஒத்திருப்பதால் வேதங்களிலும் புராணங்களிலும் ஜம்புத்தீவு என்றும் சங்க இலக்கியங்களில் நாவலந்தீவு என்றும் அழைக்கப்பட்ட பாரத தேசத்தை காப்பதற்கும், மொழியாலும், தொழிலாலும், இனத்தாலும் பிரிவுகள் பல இருந்தாலும் பாரதம் முழுவதும் ஒரே நாடு என்ற நோக்கில் மருதுபாண்டியர்கள் திருச்சியில் வெளியிட்ட “ஜம்புத்தீவு பிரகடனம்” என்பது க்ஷத்திரியனின் சங்க நாதம்! பாரத விடுதலை வரலாற்றில் ஒரு மைல்கல்! விடுதலை வேட்கையை உணர்ச்சிகளாய் கொட்டி உருவாக்கிய அறிக்கை கோழையினையும் கொதித்தெழச் செய்யும்!
ஆங்கிலேயப் படையில் அடிமைச் சேவகம் செய்யும் நம்மவர்கள், அங்கிருந்து வெளியேறி வெள்ளையரைக் கண்ட மாத்திரத்தில் வெட்டி வீழ்த்த வேண்டுகோள் வைக்கிறார்கள், இதுவே பின்னாளில் ஆயுத போராட்டத்திற்கு அடிகோலிற்று!
இதைச் செய்யாதவர்கள் என்ன பாவம் செய்தவர்கள் ஆகிறார்கள் என்பதையும் அவர்கள் குறிப்பிட்டு “ஐரோப்பிய இழி பிறவிகளை ஒருபோதும் மன்னிக்காத மருதுபாண்டியர்கள்” என்று பிரகடனத்தை நிறைவு செய்கிறார்கள்.
பல்லாயிரம் வீரர் கொண்ட படையாலும் மருது சகோதரர்களை மண்டியிட வைக்க முடியாது என்பதை உணர்ந்த ஆங்கிலேயே நயவஞ்சகர்கள், காளையார் கோவிலை பீரங்கியால் பிளப்போம் என அறிவிக்க, தர்மம் காக்க தலை கொடுத்தனர் மருது சகோதரர்கள்!
ஜம்புத்தீவு பிரகடனம் தான் முதன்முதலில் பரங்கியருக்கு பாரதம்விட்ட பகிரங்க சவால்!
பாரதம் சுயசார்புடன் என்றும் நிற்க எல்லோரும் நினைவிற் கொள்ள வேண்டியது ஜம்புத்தீவு பிரகடனம்!! “
இவ்வாறு ஆளுநர் பதிவிட்டுள்ளார்.
