திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே நூறு நாள் பணியில் ஈடுபட்டிருந்த பெண்களிடம் மதுபோதையில் சில்மிஷம் செய்ததோடு, தட்டி கேட்க முயன்ற பெண்களை பெட்ரோல் ஊற்றி தீயிட முயற்சித்த கூலிங்கிளாஸ் ஆசாமியை பெண்கள் தென்னைமட்டையால் வெளுத்து வாங்கியுள்ளனர்.
கொடையாஞ்சி கிராமத்தில் நூறு நாள் பணியில் ஈடுபட்டிருந்த பெண்களிடம் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த கூலிங் கிளாஸ் அணிந்த நபர் ஆபாசமாகப் பேசி சில்மிஷம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனை சில பெண்கள் தட்டிக் கேட்ட போது ஆத்திரமடைந்த நபர் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, ஆபாச வார்த்தைகளால் அர்ச்சித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் அங்கு இருந்த தென்னை மட்டையால் தர்ம அடி கொடுத்துள்ளனர்.
அந்த கூலிங்கிளாஸ் நபரும் அங்கிருந்த பெண்களையும் அவர்களுக்கு ஆதரவாக வந்தவர்களையும் பதிலுக்கு தாக்கியதுடன், தான் இருசக்கர வாகனத்தில் கொண்டு வந்த பெட்ரோல் கேனை எடுத்து அங்கிருந்த பெண்களின் மீது பெட்ரோலை ஊற்றி தீயிட முயன்றுள்ளார்.
சுதாரித்துக் கொண்ட பெண்கள் உடனடியாக அம்பலூர் காவல்துறையினருக்கு தகவல் அளித்ததைத் தொடந்து, விரைந்து வந்த காவல்துறையினர் அந்த நபரைப் பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அந்த கூலிங்கிளாஸ் நபர், திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பதும் அதே பகுதியில் உள்ள தனது மச்சான் வீட்டிற்கு சொத்து தகராறு காரணமாக அடிக்கடி வந்து தகராறு செய்துள்ளார். அப்படி வந்தவர் 100 நாள் பணியில் ஈடுபட்டிருந்த அவரது அக்காவிடம் தகராறில் ஈடுபட்டதோடு, அதனைத் தட்டி கேட்ட பெண்களிடம் சில்மிஷம் செய்து ரகளை ஈடுபட்டும், பெட்ரோல் ஊற்றி தீயிட முயற்சித்ததும் தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீசார் நாகராஜ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
