விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் நிகழ்ந்த பயங்கர வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23ஆக அதிகரித்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் கட்டனார்பட்டி அருகே தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஒன்றில் இன்று (ஏப். 19) மாலை பயங்கர வெடி விபத்து நிகழ்ந்தது. விடுமுறை நாளான இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) தொழிலாளர்கள் 20க்கும் மேற்பட்டோர் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, திடீரென பட்டாசு வெடித்துச் சிதறி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் 14 பேர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல் வெளியானது. சிறிது நேரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த தீயணைப்புத் துறையினர், பட்டாசு ஆலையில் பற்றி எரிந்த தீயைக் கட்டுப்படுத்தினர். படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். வெடிபொருள் உராய்வின் போது விபத்து நிகழ்ந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. தலைமறைவாகி உள்ள பட்டாசு ஆலை உரிமையாளரை 4 தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா ஆகியோர் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். விரிவான விசாரணைக்கு பிறகு முழுமையான விவரங்கள் தெரிய வரும் என ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version