மயிலாடுதுறை மாவட்டம் மேமாத்தூரில் பெட்ரோல் பங்க் பெண் ஊழியர் மற்றும் மேலாளரை போதை இளைஞர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுபோதையில் இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த 6 பேர் கும்பல் ஒன்று 350 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டுவிட்டு பணத்தை தராமல் பேசிக் கொண்டிருந்துள்ளது. இதனால் பெண் ஊழியர் பொன்மணி, பணத்தைக் கேட்டபோது தருகிறேன் எனக் கூறியவர்கள் இருசக்கரவாகனங்களில் ஏறி புறப்பட்டு சென்றுள்ளனர். இதனால் பொனமணி அவர்களை நிறுத்தி பணத்தைக் கொடுத்துவிட்டு செல்லுங்கள் எனக் கூறியுள்ளார்.
அப்போது போதை இளைஞர்கள் பணத்தை தராமல், பொன்மணியிடம் தகராறில் ஈடுபட்டு தாக்கியதோடு, அவரது கணவர் மோகன் ராஜ் மற்றும் தடுக்க வந்த மேலாளர் வினோத்குமார் ஆகியோரையும் சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.
இதனால் காயமடைந்த பொன்மணி மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் அளித்த புகாரின் பேரில், பெட்ரோல் பங்கில் இருந்த சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட செம்பனார்கோவில் போலீசார் பரசலூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெகதீசன் (21), திருமூர்த்தி (19), மேலப்பாதியை சேர்ந்த லிங்கராஜ் (19) மற்றும் 17 வயதுடைய சிறுவர்களான ஆதிஷ், சஞ்சய் ஆகிய ஐந்து பேரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களை திருச்சம்பள்ளியில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் ஜெகதீசனை நீதிமன்றக் காவலில் அடைக்க உத்தரவிட்ட, நீதிபதி திருமூர்த்தி, லிங்கராஜ் ஆகிய இருவரையும் நீதிமன்ற பிணையில் விடுவித்தார். மேலும் 17 வயதுடைய சிறுவர்கள் இருவரையும் மயிலாடுதுறையில் உள்ள இளம்சிறார் நீதிக்குழுமத்தில் நாளை காலை ஆஜர்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டு பெற்றோர்களுடன் அனுப்பி வைத்தார். மேலும் இந்த சம்பவத்தில் தலைமறைவாக உள்ள ஹரிஹரசுதன் என்பவரை செம்பனார்கோவில் போலீசார் தேடி வருகின்றனர்.
பெட்ரோல் பங்கில் பெண் ஊழியரை போதை இளைஞர்கள் தாக்கிய சிசிடிவி காட்சி தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது.
