தமிழக மின்சார வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பவும், துறையை நவீனப்படுத்தி ஊழலற்ற நிர்வாகத்தை உறுதி செய்யவும் தமிழக அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மின்சார வாரிய வரலாற்றில் முதல்முறையாக 300 உதவி பொறியாளர்களுக்கு செயற்பொறியாளர்களாக பதவி உயர்வை வெளிப்படை தன்மையுடன் வழங்கியதாக அமைச்சர் நிர்மல் குமாருக்கு மின்வாரிய பொறியாளர்கள் சங்கம் சார்பில் பாராட்டு விழா, இன்று சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் மின்வாரியத்துறை அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமார் , மின்வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் நிர்மல் குமார், ” மின்சார வாரியத்தில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக உதவிப் பொறியாளர்களாகப் பணிபுரிந்து, பதவி உயர்வு கிடைக்காமல் சட்டப் போராட்டம் நடத்தி வந்த 300 ஊழியர்களுக்கு, உடனடியாகச் செயற்பொறியாளர்களாகப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் விஜய்யின் உத்தரவின் பேரில், ஊழியர்களின் நீண்டகாலப் கோரிக்கைகள் மற்றும் நிலுவையில் உள்ள பதவி உயர்வுகள் முன்னுரிமை அடிப்படையில் துரிதமாக வழங்கப்பட்டு வருகின்றன. இதேபோல் மற்ற பிரிவுகளிலும் நிலுவையில் உள்ள பதவி உயர்வுப் பணிகள் விரைந்து முடிக்கப்படும்” என்றார் .
70,000 காலிப்பணியிடங்கள்
”மின்சார வாரியத்தில் தற்போது சுமார் 70,000 பணியாளர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. பணிச்சுமையைக் குறைக்கும் வகையில், முதற்கட்டமாக 15,000 பணியாளர்களைப் புதியதாக வேலைக்கு எடுப்பதற்கான வரைவு அறிக்கை (Proposal) தயாராகி வருகிறது.
முதலமைச்சரின் ஒப்புதலுக்குப் பின், இந்த ஆண்டிலேயே இப்பணியிடங்கள் அனைத்தும் தற்காலிகப் பணியிடங்களாக இல்லாமல், முழுமையான அரசுப் பணியிடங்களாக நிரப்பப்படும். மேலும், கேங்மேன் (Gangman) பணியிடங்கள் தொடர்பான நிலுவை விவகாரங்களில் இன்னும் சில வாரங்களில் முறையான அறிவிப்பு வெளியாகும்” என மேலும் தெரிவித்தார்.
