தமிழ்நாட்டில் திமுக தலைமையில் அமைக்கப்பட்டிருந்த மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தற்போது நடைமுறையில் இல்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழ்நாட்டில் முன்பு இருந்த திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தற்போது இல்லை. எனினும், தேசிய அளவில் உள்ள ‘இந்தியா’ (I.N.D.I.A) கூட்டணியில் இடதுசாரி கட்சிகள் தொடர்ந்து நீடிக்கின்றன. இந்த ‘இந்தியா’ கூட்டணியில் திமுகவின் நிலைப்பாடு என்ன என்பது விரைவில் தெரியவரும். அதன் பின்னரே இக்கூட்டணியில் வேறு புதிய கட்சிகள் இணையுமா என்பது குறித்துத் தெரியவரும். தமிழ்நாட்டில் கூட்டணி இல்லை என்றாலும், மக்கள் நலன் சார்ந்த மற்றும் ஒத்த கருத்துடைய பிரச்சினைகளுக்காக திமுகவோடு இணைந்து போராட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எப்போதும் தயாராகவே உள்ளது.”

முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை தொடங்கியுள்ள புதிய இயக்கம், அமித்ஷா மற்றும் மோடியின் ஆசியோடுதான் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நேரடியாகப் பாரதிய ஜனதா கட்சியால் காலூன்ற முடியவில்லை என்பதால், வேறொரு பெயரில் அண்ணாமலையை முன்னிறுத்தி உள்ளே நுழைய முயற்சிக்கின்றனர். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கீழ் இயங்கும் 2,500-க்கும் மேற்பட்ட கிளை அமைப்புகளில், அண்ணாமலை தற்போது தொடங்கியிருக்கும் புதிய இயக்கமும் ஒன்றுதான்.”

“தமிழ்நாட்டில் ஜனாதிபதி ஆட்சி அமைந்துவிடக் கூடாது என்ற நோக்கில்தான் நாங்கள் (தமிழக வெற்றிக் கழக) அரசுக்கு ஆதரவு கொடுத்தோம். மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்பியதால் தான் தவெக ஆட்சி அமைந்துள்ளது. தேர்தலில் மிகப்பெரிய அலை ஏற்பட்டு அவர்கள் ஆட்சிக்கு வரவில்லை, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளனர், அவ்வளவுதான்.

அதிமுகவைச் சேர்ந்த 24 எம்.எல்.ஏ-க்கள் தவெக அரசுக்கு ஆதரவு அளித்தது அவர்களாகவே எடுத்த முடிவு; தவெக தரப்பில் ஆதரவு எதுவும் கோரப்படவில்லை. தவெக ஆட்சியில் இருப்பவர்கள் அனைவரும் அரசியலுக்கும், ஆட்சிப் பொறுப்பிற்கும் புதியவர்கள் என்பதால், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற அவர்களுக்குக் கால அவகாசம் கொடுக்க வேண்டும். அதேநேரம், கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் எந்தவொரு அரசாலும் முழுமையாக நிறைவேற்றிவிட முடியாது.”

“மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு புதிய ஆட்சி, 3 மாதங்கள் கூடத் தாங்காது என்று கூறுவது முற்றிலும் தவறானது. அப்படி ஒரு கருத்தை மு.க.ஸ்டாலின் சொன்னாலும் சரி, எடப்பாடி பழனிசாமி சொன்னாலும் சரி, அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும், தமிழக முதல்வர் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் சந்தித்த போது, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியையும் சந்தித்திருக்க வேண்டும். சந்திப்பிற்கு நேரம் கேட்கப்பட்டதாக தவெக தரப்பில் கூறப்பட்டதை அதிமுக மறுத்துள்ளது தேவையற்றது.”

“கட்சி மாறுவதும், பதவிகளை ராஜினாமா செய்வதும் தமிழ்நாட்டு அரசியலில் காலங்காலமாக நடக்கும் இயல்புதான். இதில் புதிதாக எதுவும் இல்லை. தற்போதைய ஆட்சியில் சட்ட ஒழுங்கு பிரச்சினைகள் உடனடியாகக் கட்டுப்படுத்தப்பட்டு, குற்றவாளிகள் விரைந்து கைது செய்யப்படுகின்றனர். கடந்த ஆட்சியைப் போலவே இப்போதும் சட்டம் ஒழுங்கு நடவடிக்கை தொடர்கிறது. ஆனால், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியை இழிவுபடுத்துவது மிக மிகத் தவறான செயல். இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் தங்களையே இழிவுபடுத்திக் கொள்கிறார்கள்.”

“கடந்த ஒன்றரை மாத காலமாக மத்திய அரசு தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகிறது. இதனால் ஏழை, எளிய மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். ஆனால் மத்திய அரசு இதைப் பற்றி கவலைப்படாமல் இருப்பது கண்டனத்திற்குரியது. மேலும், மத்திய அரசால் ஒரு பொதுத் தேர்வைக்கூட முறையாக நடத்த முடியவில்லை. இவ்வளவு முறைகேடுகள் நடந்த பிறகும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்னும் தன் பதவியில் நீடிப்பது அநீதியானது. இதைக் கண்டித்துத்தான் நேற்று காக்கரோ ஜனதா கட்சி இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில், கடந்த அதிமுக ஆட்சியின் நிலைபாடே தொடரும் என்று தற்போதைய தமிழ்நாடு சட்ட அமைச்சர் நிர்மல்குமார் அறிவித்துள்ளதை நாங்கள் வரவேற்கிறோம். இந்த அரசு தனது மதச்சார்பின்மைக் கொள்கையில் எப்போதும் உறுதியாக இருக்க வேண்டும்” என்று சண்முகம் தனது பேட்டியில் வலியுறுத்தினார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version