மாநிலங்களவையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கமல் ஹாசன் மத்திய ஜல் சக்தி அமைச்சகத்துக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த கேள்விகளுக்கு விடையளிக்கப்பட்டுள்ளது.
காவிரி ஆற்றில் தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பாக கமல்ஹாசன் எழுப்பியுள்ள கேள்விகள் வருமாறு…
(அ) மேகதாட்டு திட்டத்திற்காக திருத்தப்பட்ட திட்ட அறிக்கையை (DPR) கர்நாடக அரசு சமர்ப்பித்துள்ளதா? மேலும் காவிரி நீர் மேலாண்மை வாரியம் (CWMA) கருத்துக்கள் எதையும் தெரிவித்து அதை முன்னோக்கி அனுப்பியுள்ளதா?
(ஆ) இந்தத் திட்டத்தால் காவிரியின் கீழ்நிலை மாநிலமான தமிழ்நாட்டின் பாசன வசதி மற்றும் குடிநீர் தேவைகளுக்குப் பாதிப்பு ஏற்படுமா என்பதை மத்திய அரசு ஆய்வு செய்துள்ளதா? அதன் முடிவு என்ன?
(இ) காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு, உச்ச நீதிமன்றத் தீர்ப்பு மற்றும் 2018 காவிரி நீர் மேலாண்மைத் திட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு நடந்துகொண்டால் மட்டுமே இத்திட்டத்திற்கு அனுமதி வழங்கப்படுமா?
(ஈ) கர்நாடகாவின் திருத்தப்பட்ட திட்ட அறிக்கை குறித்து தமிழ்நாட்டின் கருத்துக்களை மத்திய அரசு பரிசீலித்துள்ளதா? விவரங்கள் என்ன?
கமல்ஹாசனின் கேள்விக்கு மத்திய ஜல் சக்தித் துறை இணையமைச்சர் திரு. ராஜ் பூஷன் சௌத்ரி அளித்துள்ள பதிலில்,
கர்நாடக அரசு 2019-ஆம் ஆண்டு சமர்ப்பித்த மேகதாட்டு அணை மற்றும் குடிநீர்த் திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை (DPR), திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு மற்றும் மத்திய நீர் ஆணையத்தின் (CWC) வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு திருத்தப்பட்ட புதிய திட்ட அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு கர்நாடக அரசிடம் கேட்கப்பட்டுள்ளது.
இதுவரை திருத்தப்பட்ட புதிய திட்ட அறிக்கை மத்திய நீர் ஆணையத்திற்கு வந்து சேரவில்லை.
காவிரிப் படுகையில் அமையும் நீர் திட்டங்களுக்கான திட்ட அறிக்கைகளை (DPR) மத்திய நீர் ஆணையம் பரிசீலிக்கும் போது, மத்திய நீர் ஆணையத்தின் நடைமுறை வழிகாட்டுதல்கள், காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு, 16 பிப்ரவரி 2018 அன்று உச்ச நீதிமன்றம் வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் மட்டுமே ஆய்வு மற்றும் மதிப்பீடு செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
