தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று கூடியது. தவெக அரசின் முதல் பொதுவான பட்ஜெட் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நேற்று வேளாண்மை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று பேரவையில் இரண்டு பட்ஜெட்டுகள் மீதான விவாதம் நடைபெற்றது.

சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கியவுடன் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் இரங்கல் குறிப்புகளை வாசித்தார். மறைந்த திரைப்பட இயக்குநரும் நடிகருமான கே. பாக்யராஜ், கவிஞரும் எழுத்தாளருமான புவியரசு, பின்னணிப் பாடகி எஸ். ஜானகி, எழுத்தாளர் பூமணி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சுருளிவேல் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து பேரவையில் இரு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதையடுத்து மேகதாது அணை விவகாரம் தொடர்பான கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார். விவசாயிகள் பிரச்சினைகள் குறித்து ஒத்திவைப்புத் தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். முழுத் தள்ளுபடி என்று அறிவித்துவிட்டுப் பயிர்க் கடனை அரைகுறையாக மட்டும் தள்ளுபடி செய்தது ஏன் என்று அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றார். டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவித்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

மேகதாது விவகாரத்தில் அரசு எடுத்த நடவடிக்கைகளைப் பேரவைக்கு விளக்கக் கோரினார். தவெக அரசு அமைந்த பிறகு கர்நாடகா மேகதாது திட்டத்தில் அதிக வேகம் காட்டுவதாக அவர் சுட்டிக்காட்டினார். கர்நாடக முதல்வர் பெங்களூரில் ஆகஸ்ட் 2-ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார். அதில் ஐந்து முன்னாள் முதலமைச்சர்கள் பங்கேற்றனர். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து அணை கட்ட நிதி உதவி கோரியதோடு, ஜல்சக்தித் துறை அமைச்சரையும் சந்தித்து ஒப்புதல் வழங்கக் கோரியுள்ளனர்.

கடந்த ஒரு மாதத்தில் கர்நாடகாவில் உள்ள அனைத்துக் கட்சிகளும் இணைந்து இந்தத் திட்டத்திற்காகச் செயல்படுவதாக அவர் தெரிவித்தார். தமிழகத்திலும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி மேகதாது அணையை எதிர்க்க வேண்டும் என அனைத்துக் கட்சிகளும் வலியுறுத்துகின்றன. அதற்கான கோரிக்கையை நாங்கள் வைத்தபோதிலும், அரசு ஏன் தயங்குகிறது அல்லது பயப்படுகிறது என உதயநிதி கேள்வி எழுப்பினார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version