நாடாளுமன்றத் தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிலைக்குழுத் தலைவரும் பாஜக எம்.பியுமான நிஷிகாந்த் துபே, பிரதமர் நரேந்திர மோடியின் வீடியோ பேஸ்புக்கில் தற்காலிகமாக நீக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் நேரடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

தேர்வு வினாத்தாள் கசிவுகளை தடுக்க அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி பேசிய வீடியோ, பேஸ்புக் பக்கத்தில் இருந்து சுமார் ஐந்து மணி நேரம் (இரவு 12.30 முதல் காலை 5 மணி வரை) காணாமல் போயிருந்தது. மெட்டா நிறுவனம் இதை தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஏற்பட்ட தவறு என விளக்கம் அளித்து, வீடியோவை மீண்டும் வெளியிட்டது. ஆனால் இந்த விளக்கம் போதுமானதல்ல என மத்திய அரசு மற்றும் நாடாளுமன்றக் குழு கருதியது.

நாடாளுமன்றக் குழு நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் மெட்டா, யூடியூப், எக்ஸ், ஸ்னாப்சாட், கூகுள் ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகளும், மத்திய உள்துறை மற்றும் மின்னணு & தகவல் தொழில்நுட்ப அமைச்சக அதிகாரிகளும் பங்கேற்றனர். இச்சம்பவம் குறித்து 10 நாட்களுக்குள் எழுத்துப்பூர்வ விளக்கம் அளிக்குமாறு மெட்டாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கூட்டத்தில் மெட்டா பிரதிநிதிகள் மன்னிப்பு கேட்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தபோதிலும், நிஷிகாந்த் துபே, “இந்த மன்னிப்பு நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான மார்க் ஜுக்கர்பெர்க்கிடமிருந்தே வர வேண்டும்” என உறுதியாகக் கூறினார். அவர் மன்னிப்பு கேட்கத் தவறினால், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 79ன் கீழ் சமூக ஊடகங்களுக்கு அளிக்கப்படும் ‘பாதுகாப்பு அந்தஸ்து’ (safe harbour) திரும்பப் பெறப்படும் என எச்சரித்தார்.

இந்த அந்தஸ்து இருந்தால் மட்டுமே பயனாளர்களின் பதிவுகளுக்குத் தளம் சட்டப்பூர்வமாகப் பொறுப்பேற்கத் தேவையில்லை என்ற விலக்கு கிடைக்கும். துபே மேலும், “2024 இந்திய தேர்தல் முடிவுகள் குறித்து கடந்த ஜனவரியில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்து பின்னர் மன்னிப்பு கேட்ட ஜுக்கர்பெர்க், தற்போது பிரதமரின் வீடியோவை நீக்கியது இந்தியாவின் அமைதியை சீர்குலைக்கும் நோக்கத்தையே காட்டுகிறது” எனச் சாடினார்.

அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் மொத்த பார்வையாளர்கள் எண்ணிக்கை 23 மில்லியனாக இருந்தபோதிலும், பதிவு செய்யப்படாத அமைப்புகள் மற்றும் புதிய கணக்குகளின் பார்வைகள் 27 மில்லியனாக செயற்கையாக உயர்த்தப்படுவதாக மெட்டா, யூடியூப், எக்ஸ் தளங்களின் அல்காரிதத்தைக் குற்றம் சாட்டினார். இந்தச் சம்பவம் சமூக ஊடக தளங்களின் பொறுப்புணர்வு மற்றும் இந்தியாவின் டிஜிட்டல் இறையாண்மை குறித்த கேள்விகளை மீண்டும் எழுப்பியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version