சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகரும் இயக்குநருமான ஆர். பார்த்திபன் தாக்கல் செய்த பொதுநல மனுவுக்கு நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆர். பார்த்திபன் தாக்கல் செய்த மனுவில், சாதி, மதமற்ற சமுதாயம் உருவாக வேண்டும் என்ற கொள்கையில் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும், தனது திரைப்படங்கள் மூலமாகவும் அந்த கருத்தை வலியுறுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், தன்னை “சாதி, மதமற்றவர்” என அங்கீகரிக்கும் சான்றிதழை பெற தாசில்தாரிடம் விண்ணப்பித்தபோது அது வழங்கப்படவில்லை. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகி, நீதிமன்ற உத்தரவின் மூலம் அந்தச் சான்றிதழைப் பெற்றதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கடந்த 2025-ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், “சாதி, மதமற்றவர்” என்ற சான்றிதழ் கோரி யாரேனும் விண்ணப்பித்தால், அவற்றை பரிசீலிக்கும் வகையில் வருவாய்த் துறை அதிகாரிகளுக்குத் தேவையான வழிகாட்டுதல்களை அரசு அரசாணை அல்லது சுற்றறிக்கை மூலம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது என்றும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆனால், அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நீண்ட காலம் ஆகியும் தமிழக அரசு இதுவரை அரசாணையோ, சட்டமோ அல்லது நிர்வாகச் சுற்றறிக்கையோ வெளியிடவில்லை என்று மனுதாரர் குற்றம்சாட்டியுள்ளார்.

எனவே, “சாதி, மதமற்றவர்” என்ற சான்றிதழ் கோரும் அனைத்து குடிமக்களுக்கும் உடனடியாக சான்றிதழ் வழங்கும் வகையில் சட்டம், அரசாணை அல்லது சுற்றறிக்கை பிறப்பிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என நீதிமன்றத்தை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை பரிசீலித்த நீதிபதிகள், இதுகுறித்து தமிழக அரசு நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை ஒத்திவைத்தனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version