பால் விலை உயர்வு மற்றும் பால் உற்பத்தி பாதிப்பு தொடர்பாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடப்பாண்டு தமிழ்நாட்டில் பெய்ய வேண்டிய கோடைகால பருவமழை பொய்த்துப் போனதாலும், கடந்த 2025ம் ஆண்டு இறுதியில் தமிழ்நாடு முழுவதும் பாலுற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டிருந்ததாலும் முன்னணி மற்றும் சிறு, குறு, நடுத்தர தனியார் பால் நிறுவனங்களுக்கிடையே பால் கொள்முதல் செய்வதில் கடும் போட்டி நிலவி வருகிறது.

தமிழ்நாட்டில் மட்டுமின்றி ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா கேரளா, பாண்டிச்சேரி உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலும் கடந்த ஓராண்டுக்கும் மேலாக பாலுற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதன் காரணமாக தங்களின் பால் வணிகத்தை தக்க வைத்துக் கொள்ள ஒவ்வொரு தனியார் பால் நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு பால் கொள்முதல் விலையை பால் உற்பத்தியாளர்களுக்கு உயர்த்தி வழங்கி வருவதோடு, பால் கொள்முதலுக்கேற்ப விவசாய பெருமக்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகையும் வழங்கி வருவதால் தமிழ்நாடு அரசின் ஆவினுக்கு பால் வழங்கும் பால் உற்பத்தியாளர்கள் கூட ஆவினுக்கு வழங்குவதை குறைத்துக் கொண்டு தனியாருக்கு பால் வழங்கத் தொடங்கியுள்ளதால் கடந்தாண்டு திமுக ஆட்சியில் இருந்தே ஆவினுக்கான தினசரி பால் கொள்முதல் சுமார் 25லட்சம் லிட்டராக சரிந்தது தற்போது வரை அது உயரவே இல்லை.

மேலும் கடந்தாண்டு இறுதி முதல் தமிழ்நாடு முழுவதும் பாலுக்கான கொள்முதல் விலையை ஒவ்வொரு தனியார் பால் நிறுவனங்களும் விவசாய பெருமக்களான பால் உற்பத்தியாளர்களுக்கு போட்டி போட்டுக் கொண்டு உயர்த்தி வழங்கி வருவதால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடு செய்ய கடந்த பிப்ரவரி மாதம் இறுதி வாரத்தில் அனைத்து தனியார் பால் நிறுவனங்களும் பால் மற்றும் தயிர் விற்பனை விலையை லிட்டருக்கு 2.00ரூபாய் உயர்த்தின.

இந்த நிலையில் ஏற்கனவே மேற்காசியாவில் நிலவிய போரினால் சர்வதேச அளவிலான கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு, அதனால் வாகன எரிபொருள் விலை உயர்வு போன்றவற்றால் பால் பொருட்கள் உற்பத்திக்கு தேவையான பல்வேறு மூலப் பொருட்களின் விலையும், பால் கொள்முதல், விநியோக வாகனங்களுக்கான வாடகையும் கடுமையாக உயர்ந்து போனதாலும், பால் உற்பத்தியாளர்களுக்கு பாலுக்கான கொள்முதல் விலையை தொடர்ந்து உயர்த்தி கொடுத்து வருவதாலும் நடப்பாண்டில் இரண்டாவது முறையாக மீண்டும் பால், தயிர் விற்பனை விலையை உயர்த்தும் முடிவிற்கு தனியார் பால் நிறுவனங்கள் வந்துள்ளன.

அந்த வகையில் தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவின் முன்னணி தனியார் பால் நிறுவனங்களில் ஒன்றான ஆரோக்யா பால் நிறுவனம் நாளை (வியாழக்கிழமை 09.07.2026) முதல் பால் மற்றும் தயிர் விற்பனை விலையை லிட்டருக்கு 4.00ரூபாய் உயர்த்துவதோடு, பால் முகவர்கள் மற்றும் சில்லறை வணிகர்களுக்கான கமிஷன் (லாபம்) தொகையையும் உயர்த்துவதாக பால் முகவர்களுக்கு சுற்றறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளது.

அதன்படி 500மிலி சமன்படுத்தப்பட்ட பால் (Toned Milk) 29.00ரூபாயில் இருந்து 31.00ரூபாயாகவும், நிலைப்படுத்தப்பட்ட பால் (Standardized Milk) 35.00ரூபாயில் இருந்து 37.00ரூபாயாகவும், கொழுப்பு சத்து செரிவூட்டப்பட்ட பால் (Full Gream Milk) 39.00ரூபாயில் இருந்து 41.00ரூபாயாகவும், 1000மிலி சமன்படுத்தப்பட்ட பால் (Toned Milk) 54.00ரூபாயில் இருந்து 57.00ரூபாயாகவும், நிலைப்படுத்தப்பட்ட பால் (Standardized Milk) 66.00ரூபாயில் இருந்து 69.00ரூபாயாகவும், கொழுப்பு சத்து செரிவூட்டப்பட்ட பால் (Full Gream Milk) 73.00ரூபாயில் இருந்து 76.00ரூபாயாகவும், 500கிராம் ஹட்சன் தயிர் 42.00ரூபாயில் இருந்து 44.00ரூபாயாகவும், ஆரோக்யா தயிர் 40.00ரூபாயில் இருந்து 42.00ரூபாயாகவும் விற்பனை விலை உயர்வு ஜூலை 9ம் தேதி முதல் அமுலுக்கு வருகிறது.

முன்னணி தனியார் பால் நிறுவனத்தின் விற்பனை விலை உயர்வினை தொடர்ந்து தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களைச் சேர்ந்த அனைத்து தனியார் பால் நிறுவனங்களும் அடுத்தடுத்து பால், தயிர் விற்பனை விலையை உயர்த்தும் முடிவில் இருக்கின்றன. தனியார் பால் நிறுவனங்களின் தவிர்க்க முடியாத இந்த விற்பனை விலை உயர்வு என்பது ஏழை, எளிய, நடுத்தர மக்களை கடுமையாக பாதிக்கும் என்பதால் ஆரோக்யா நிறுவனம் விற்பனை விலை உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் அநநிறுவனத்தை கேட்டுக் கொள்கிறது.

மேலும் கோடைகால பருவமழை பொய்த்துப் போனதால் வரும் மழைக்காலத்தில் கூட மழைப் பொழிவு குறைவாக இருக்கும் என வல்லுநர்கள் தெரிவித்து வரும் நிலையில் தமிழ்நாட்டில் நடப்பாண்டில் வரலாறு காணாத வகையில் பால் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதால் தமிழ்நாட்டில் பால் உற்பத்தியை அதிகரிக்க தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.

கடந்த 2011-2016 அதிமுக ஆட்சியில் அம்மையார் ஜெயலலிதா அவர்களால் கொண்டு வரப்பட்ட “விலையில்லா கறவை மாடுகள் திட்டம்” தமிழ்நாட்டில் பால் உற்பத்தியை அதிகரிக்கச் செய்ததோடு, 2020-2021ம் நிதியாண்டில் ஆவினுக்கான தினசரி பால் கொள்முதல் சுமார் 43லட்சம் லிட்டர் வரை உயர காரணமாக இருந்தது. ஆனால் 2021ல் ஆட்சிக்கு வந்த திமுக அரசு அந்த திட்டத்தை கைவிட்ட காரணத்தால் ஆவினுக்கான பால் கொள்முதல் மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் ஒட்டுமொத்தமாக பால் உற்பத்தி பாதிக்கப்பட இதுவும் ஒரு காரணமாக இருந்தது.

எனவே தமிழ்நாட்டில் வரும் மாதங்களில் பால் தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்கவும், பால் உற்பத்தியை அதிகரிக்கவும் உடனடியாக விவசாய பெரு மக்களுக்கு விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி, கால்நடைகளுக்கான தீவனம், மருத்துவ பராமரிப்பு உள்ளிட்ட செலவினங்களை கவனத்தில் கொண்டு பால் உற்பத்தியாளர்களுக்கு பாலுக்கான கொள்முதல் விலையை உயர்த்தி, அதற்கேற்ற வகையில் ஆவின் பால் விற்பனை விலை, விற்பனைக்கான கமிஷன் தொகையை உயர்த்தி வழங்கிடவும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மரியாதைக்குரிய திரு. ஜோசப் விஜய் அவர்களை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version