வடகிழக்கு மாநிலமான சிக்கிமின் நாம்சி மாவட்டம், ஜொலுங்கே நகருக்கு உட்பட்ட சமர்டங் பகுதியில் புதிதாக சுரங்கம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. அப்போது திடீரென ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக சுரங்கம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் தொழிலாளர்கள் 10 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

தகவல் அறிந்ததும் நாம்சி மாவட்ட ஆட்சியர் அனுபா தம்லிங் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF), மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF), சிக்கிம் காவல்துறை, தீயணைப்புத் துறை மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் மீட்புப் பணியில் தீவிரமாக இறங்கினர்.

சுரங்க இடிபாடுகளுக்குள் 27 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டதாக கூறப்பட்டநிலையில், 8 பேர் சடலமாக மீட்கப்பட்டனர்.  தொடர்ந்து நடந்த மீட்புப் பணியில் மேலும் 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10ஆக உயர்ந்தது. பலியானவர்களின் உடல்கள் கேங்டாக் நகரில் உள்ள மாவட்ட மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள தொழிலாளர்களை மீட்கும் முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

விபத்து குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சிக்கிம் முதலமைச்சர் பிரேம் சிங் தமங், பிரதமர் மோடி தம்மிடம் தொடர்பு கொண்டு நிலவரத்தைக் கேட்டறிந்ததாகவும், தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதாக உறுதி அளித்திருப்பதாகவும் தெரிவித்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version