நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் சூழலில், தேர்வு முறைகேடுகள் மற்றும் கல்வித் துறை பிரச்சினைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது நேற்று மேற்கொள்ளப்பட்ட டெல்லி காவல்துறை நடவடிக்கை நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதைக் கண்டித்து, டெல்லி லோக் கல்யாண் மார்க்கில் அமைந்துள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தை முற்றுகையிடும் நோக்கில், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டக்காரர்களுடன் இன்று பேரணியாக செல்ல முயன்றனர்.  அவர்களை போலீசார் தடுத்து நிறுத்திய நிலையில், அங்கேயே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், போராட்ட களத்திற்கு வந்த பிரதமர் அலுவலகத்தின் இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், கல்வித்துறை விவகாரங்கள் குறித்து நாடாளுமன்றத்தில்  விவாதிக்க அரசு தயார் எனத் தெரிவித்து போராட்டத்தைக் கைவிடுமாறு ராகுல் காந்தியிடம் கேட்டுக்கொண்டார். இருப்பினும், “மாணவர்களின் எதிர்காலத்தைச் சீரழித்ததற்காகக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும். மேலும், மாணவர் மீதான தாக்குதலுக்குப் பிரதமரும், உள்துறை அமைச்சரும் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று கூறி ராகுல் காந்தி போராட்டத்தைத் தொடர்ந்தார்.

ராகுல் காந்தியின் இந்தத் தர்ணா போராட்டத்திற்குச் சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சுப்ரியா சுலே மற்றும் அரவிந்த் கெஜரிவால், சரத் பவார் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆதரவு தெரிவித்தனர்.

போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து, அவர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் கேட்டுக்கொண்டனர். மறுத்ததைத் தொடர்ந்து, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் காங்கிரஸ் எம்பிக்களைக் காவல்துறையினர் வலுக்கட்டாயமாகப் போராட்டம் நடந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்தி, வாகனங்களில் ஏற்றித் தடுத்துக் காவலில் வைத்தனர்.

கைதுக்கு முன்பாகத் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட ராகுல் காந்தி, “நேற்று இளைஞர்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதலுக்குப் பதிலளிக்குமாறு கோரவே நாங்கள் பிரதமரின் இல்லம் நோக்கி பேரணி வந்தோம். பதிலளிக்காமலும், விளைவுகளைச் சந்திக்காமலும் தப்பித்துவிடலாம் எனப் பிரதமர் மோடி நினைக்கிறார்; ஆனால் இந்த முறை அது முடியாது. நாட்டின் இளைஞர்களின் குரலை நசுக்க முடியாது” என்று மிகக் காட்டமாகப் பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில், ராகுல் காந்தி மீதான கைது நடவடிக்கை  டெல்லியில் பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version