தமிழகத்தில் தவெக அரசை கவிழ்க்கும் நோக்கில் திமுகவும் அதிமுகவும் இணைந்து செயல்பட்டு வருவதாகவும், தவெக எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
சிவகாசியில் பேசிய அதிமுக. முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, ”முதலமைச்சர் பதவியில் உள்ள விஜய், முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கண்ணிய குறைவாக பேசக்கூடாது. மு.க.ஸ்டாலினுக்கு எப்போது கோபம் வருகிறதோ? அப்போது தமிழகத்தில் தவெக ஆட்சி இருக்காது” என தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், சென்னை மின்வாரிய அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் நிர்மல் குமார், கே.டி. ராஜேந்திர பாலாஜியின் கருத்துக்கு பதிலளித்தார்.
அவர் கூறுகையில், “தமிழகத்தில் திமுக–அதிமுக கூட்டணிக்கு அனிதா ராதாகிருஷ்ணனும், ராஜேந்திர பாலாஜியும் ஒருங்கிணைப்பாளர்களாக இருப்பார்கள். அதிமுகவினர் என்ன பேசுவது என்று தெரியாமல் பேசி வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி இன்னும் பொதுச் செயலாளராக இருக்கிறாரா என்பதையே அவர்கள் மறந்துவிட்டனர்” என்றார்.
மேலும், “தற்போது வரை தவெக அரசை கவிழ்க்கும் முயற்சியில்தான் திமுக ஈடுபட்டு வருகிறது. தவெக எம்.எல்.ஏ.க்களை பணம் கொடுத்து வாங்க திமுக மற்றும் அதிமுகவினர் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர்” என குற்றம்சாட்டினார்.
“பணம் கொடுத்து எம்.எல்.ஏ.க்களை வாங்குவது தான் உண்மையான குதிரைப் பேரம். குதிரைப் பேர அரசியலில் ஈடுபட்டது தவெக அல்ல; திமுக தான். குதிரைப் பேரம் தொடர்பாக செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான நபர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்” என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
