2021-ல் திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்றது முதல் உள்ளபடியே ஏராளமான நல்ல முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனால் சமீபகாலமாக சட்டம் ஒழுங்கு விவகாரம், திமுக நிர்வாகிகள் மீதான புகார்கள் போன்றவை பூதாகரம் எடுத்துள்ளன.

திடமான முடிவுகளை எடுக்க வேண்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தன்னைச் சுற்றி உள்ள எடுபிடிகள், ஆமாம்சாமிகள் போன்றவர்களால் சரியான திசையில் பயணிக்க முடியாமல் திணறுகிறாரோ என்று தோன்றுகிறது. கிராமத்தில் ஒரு பழமொழி உண்டு. ஒருவரை வெல்லம் கொடுத்தும் கொல்லலாம், விஷம் கொடுத்தும் கொல்லலாம் என்று… அனுகூலசத்ருக்கள் என்று வடமொழியிலும் இதனைக் கூறுவார்கள்.

கிட்டத்தட்ட அப்படிப்பட்ட நபர்கள் பலர், முதலமைச்சரைச் சுற்றி அமர்ந்து கொண்டு உள்ளனரோ என்று எண்ணத் தோன்றுகிறது. பார்க்கும் திசையெல்லாம் பாலாறும், தேனாறும் ஓடுகிறது என்று தவறான அறிக்கைகளை அவருக்கு கொடுக்கிறார்களோ, மாதம் மும்மாரி பொழிகிறது என்று வாய்க்கு வந்ததை சொல்லி அவரை நம்ப வைக்கிறார்களோ அல்லது அவரும் அவ்வாறு தான் நம்ப விழைகிறாரோ என்று எண்ணும்படியான செயல்களே சமீபபமாக நிகழ்கின்றன.

சென்னை புறநகரில் அனகாபுத்தூர் என்ற இடத்தில் அடையாறு ஆற்றை புனரமைக்கும் பணிக்காக 700-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வேரோடு அகற்றப்பட்டன. அவர்களின் அழுகுரல்கள் இன்னும் ஓய்ந்தபாடில்லை. அனகாபுத்தூரில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் பெரும்பாக்கத்தில் அவர்களுக்கு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் வீடுகள் கட்டித்தரப்படும் என்று நம்பிக்கை அளிக்கப்படுகிறது.

இவ்வாறான நம்பிக்கையில் தான் கூவம் ஆற்றங்கரையில் வசித்தவர்கள் கண்ணகி நகருக்கும், செம்மஞ்சேரிக்கும் தூக்கி வீசப்பட்டனர். ஆனால் அந்த பகுதிகள் இப்போது குற்றச்செயல்களின் கூடாரம் போலாகி விட்டது. புறக்கணிக்கப்பட்டவர்களிடம் காணப்படும் ஒரு கோபம் எந்நேரமும் அவர்களிடத்தில் கனன்று கொண்டிருக்கிறது. அதனால் தான் அரசு நிர்ணயிக்கும் சட்டம், ஒழுங்கு விவகாரங்களை தாண்டிச் செல்வதில் அவர்கள் முன்னணியில் இருக்கிறார்கள். குற்றம் அவர்கள் விரும்பி தேர்ந்தெடுத்த ஒன்று அல்ல, அரசு அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்த வாய்ப்பு என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

அதேபாணியில் இப்போது அனகாபுத்தூர் பகுதி மக்களில் ஒருபிரிவினர் இந்த மண்ணிலிருந்து அகற்றப்படுகின்றனர். ஆனால் அருகிலேயே காசாகிராண்ட் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களின் அடுக்குமாடி குடியிருப்புகள் வரவுள்ளன. அதுவெல்லாம் ஆக்ரமிப்புக் கணக்கில் சேராது போல..

இந்த அவலம் நிகழ்ந்து கொண்டிருக்கும் அதேவேளையில், சென்னை வியாசர்பாடி முல்லைநகரில் உள்ள குடிசைப்பகுதிகள் திடீரென தீக்கிரையாகின. (சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளை கடந்த போதும் திராவிட அரசுகள் 50 ஆண்டுகளாக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துள்ள போதிலும், குடிசைகள் இருப்பது எந்த விதத்தில் சரி?) தங்கள் வீடுகளை இழந்த அவர்களின் கூக்குரலும் இன்னும் ஓய்ந்தபாடில்லை.

இந்த சூழ்நிலையில் தான் தனது கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவரது வருகையை வீதியெங்கும் திருவிழா போல கொண்டாடி வரவேற்பு அளித்துள்ளனர் அப்பகுதி திமுக நிர்வாகிகள். குறிப்பாக இந்துசமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னை கிழக்கு மாவட்ட செயலாளருமான சேகர் பாபு.. தொகுதிக்கு செல்வது ஒரு எம்எல்ஏவின் கடமை அல்லவா? அதனை ஏன் திருவிழா போல் கொண்டாட வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. தங்கள் கட்சித் தலைவரை வரவேற்க அவ்வாறு செய்கிறார்கள் என்றுகூட அதனை கருதிவிடலாம். ஆனால் அதனை முதலமைச்சரும் நின்று, ரசித்து, கைத்தட்டி கொண்டாடி ரசிப்பது என்னவிதமான மனநிலை. அப்படிப்பட்ட சூழல் தான் தமிழ்நாடெங்கும் உள்ளதா?. உங்கள் வரவேற்புக்கு நன்றி, ஆட்டம், பாட்டமெல்லாம் வேண்டாம், வந்த கடமையை செய்துவிட்டு புறப்படுகிறேன் என்று முதலமைச்சர் சொல்லி இருந்தால் அதனை மறுத்து அவர்கள் ஆடவா போகிறார்கள்.

அனகாபுத்தூரில் தங்கள் நிலங்களை, வீடுகளை இழந்தவர்களின் புலம்பங்கள் இன்னும் ஓயவில்லை, முல்லைநகரில் தங்கள் வீடுகளை தீக்கிரையாக்கியவர்களின் அழுகுரல் இன்னும் மாளவில்லை. ஆனால் கொளத்தூரில் சாலையில் நின்றவாறு ஆடல், பாடலை ரசிக்க முதலமைச்சருக்கு எப்படி மனம் வந்தது. அவரை இதற்கு குறை சொல்வதா? இதனை ஏற்பாடு செய்து சர்வநாடியும் ஒடுங்கியது போல் அருகில் வந்து தன்மையாக ஏற்பாடு உங்களுக்கு பிடித்திருக்கிறதா என்று தில்லானா மோகனாம்பாள் வைத்தி போல குனியும் சேகர்பாபுவை குறை சொல்வதா? ஒன்றுமே புரியவில்லை.

நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாடொறும் நாடு கெடும்.

நாட்டில் நாள்தோறும் நடைபெறும் நன்மை தீமைகளை ஆராயாமல், அதுவும் முக்கியமாக தனது அரசால் விளையும் நன்மை தீமைகளை ஆராயாமல், ஆட்சிசெய்யும் அரசால் அந்த நாடே சீர்குலைந்து போய்விடும் என்று கூறுகிறது திருக்குறள்.

தமிழ்நாடு வளர்ச்சிப் பாதையில் பயணிக்க வேண்டிய தொலைவு இன்னும் கூட இருக்கிறது. முதலமைச்சரே சொல்வது போல ஒரு ட்ரில்லியன் பொருளாதாரம் என்ற இலக்கை எட்ட இன்னும், இன்னும் உழைக்க வேண்டி இருக்கிறது. அந்த பயணத்தில் தடைக்கல்லாக இருப்பது இத்தகைய கேளிக்கையாளர்கள் தான். இவர்களை முதலமைச்சர் எட்ட வைக்க வேண்டும். இல்லையென்றால் மக்களிடம் இருந்து ஆட்சியாளர்கள் விலகிட நேரிடும்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version